கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்தாண்டைவிட இவ்வருடம் கோடை அதிகமாகவே வாட்டுகிறது. ஏற்கனவே உடல்நலப் பாதிப்புடையவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். நீர்ச்சத்து விரைவாக குன்றிவிடும் என்பதால் அதை ஈடுசெய்யும் வகையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பாரம்பரிய உணவு முறைகள் பெரிதும் உதவுகின்றன.
பதநீரும் நுங்கும் கோடையை வெல்ல இயற்கை அளித்துள்ள வரங்கள் என்றால் மிகையன்று. மோர், கூழ், தர்பூசணி, கிர்ணிப் பழம் உள்ளிட்டவையும் வெப்பத்தை தணிக்கின்றன. காலையில் பழையது சாப்பிட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். நன்னாரி, எலுமிச்சை, கற்றாழை, வெட்டிவேர், சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம், ஏலம், போன்றவையும் கோடை வெப்பத்தைத் தணிக்க வழிவகை செய்கின்றன. கேரளாவில் பொதுவாகவே சீரக நீரை அருந்தும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. சீரகம் என்றாலே அகத்தை சீர்படுத்தக்கூடியது என்றுதான் பொருள். வெந்தயத்தை ஊறப் போட்டு அந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் இயற்கையான முறையில் ஏசி செய்யப்பட்டதைப் போன்ற குளிர்ச்சியைப் பெறலாம். மேலும் இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து போன்றவற்றை உள்ள டக்கிய வெந்தயம் ரத்தத்தில் சக்கரையின் அளவு உயராமல் கட்டுப்படுத்துகிறது. கொத்தமல்லித் தழை இதே பயனையும் அளிக்கிறது.
பதிமுகம் என்ற மூலிகைப் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து அதை அருந்தினால் வெப்பம் குறுகிய நேரத்திலேயே தணிந்து விடுகிறது. பதிமுகம் தொன்மையானது என்ற போதிலும் அது பரவலாக புழக்கத்தில் இல்லை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. பதிமுகத்துக்கு பதாங்கம், கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா என்ற பெயர்களும் உண்டு. பதிமுகம் வளர்ந்து முழுமையடைய எட்டாண்டுகளாகும். இது பத்துமீட்டர் உயரம் வரை வளரக்கூடிய குறுமரமாகும்.
இதன் இலைகள் பச்சை நிறத்தில் பளிச்சிடும். இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும். இது அசப்பில் கொடுக்காப்புளி மரத்தைப் போல இருக்கும். பத்தமடை பாய் மிகவும் பிரசித்தம். இந்த கோரைப்பாய்களுக்கு பதிமுகச் சாயத் தையே பயன்படுத்துகின்றனர். வெளி நாடு களுக்கும் பத்தமடைப் பாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பதிமுக மரத்தின் உள்ளீடுகள் பயன்படுத்தப் படுகின்றன. இனிப்பு வகைகள், குளிர் பானங்கள் போன்றவற்றுக்கு இயற்கை நிற மூட்ட பதிமுக மரப்பட்டை பயன்படுத்தப் படுகிறது. மேலும் இது சிறந்த கிருமி நாசினியாகவும் விளங்குகிறது. மண்பானைத் தண்ணீரில் பதிமுகப்பட்டையை போட்டுக் குடித்தால் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, மூலநோய், சர்மநோய் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் பதிமுகப்பட்டை நீர் அருமருந்தாகும்.
பதிமுகப்பூ இலைகள், உள்ளிட்டவற்றையும் அழகு சாதனப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். பதிமுக மரத்தின் மையத்தண்டில் உள்ள சிவப்புச் சாயச்சத்து பிரேசிலின் என்று குறிப்பிடப்படுகிறது. அச்சுத்தொழில், மரத்தொழில், துணித்தொழில் போன்றவற்றிலும் பதிமுகப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வேளையாவது பதிமுகத்தண்ணீரைப் பருகினால் வெப்பத்தின்தாக்கத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.