நம் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது கீரை. கீரைகள் அனைவரும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவு. ஊட்டச்சத்துக்களில் நுண்ணூட்டச் சத்துக்கள், பெரு நுண்ணூட்டச் சத்துக்கள் என இரு வகை உள்ளன. இவற்றில் பெரு நுண்ணூட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு எளிதில் கிடைத்துவிடும். ஆனால் நுண்ணூட்டச் சத்துக்கள் எனப்படும் விட்டமின், இரும்புச்சத்து, செப்பு, துத்தநாகம், செலீனியம், புளுரைய்டு, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நம் உடலுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் சரியான அளவு உடலுக்கு கிடைக்கச் செய்யும் வேலையை கீரைகள் செய்கின்றன. இதனால் சாதாரண உடல் உபாதைகள், புற்றுநோய், இதய நோய், ஞபகமறதி போன்றவை ஏற்படுவதை தடுக்கின்றன,
கிரைகளை தினமும் உட்கொள்ளுவது எந்த அளவு முக்கியமோ அதே அளவு எவ்வாறு சமைத்து உண்ண வேண்டும் என்பதும் முக்கியம், கீரைகளை அதிகம் வேக வைக்காமல் தக்க அளவில் வேகவைத்து மிளகு சேர்த்து துவட்டல், மசியல், பருப்புடன் வேகவைத்து வடித்த சாறு, துவையல் முதலியவைகளாக சமைத்து உண்ணலாம்.
உணவிற்கு நாம் அதிகம் உபயோகிக்கும் சில கீரைகளின் பயன்கள்:
முளைக்கீரை: காய்ச்சல், இருமலை போக்கும், நல்ல பசியைத் தூண்டும்.
அறுகீரை: பல பிணிகளைப் போக்கும்.
சிறுகீரை: கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு நீக்கும், பொழிவு தரும்.
பசலைக்கீரை: வெள்ளைப்படுதல், நாச் சுவையின்மை தீரும்.
பொன்னாங்கண்ணி: கண்நோய்கள், உடல் சூடு, மூல நோய் நீங்கும், உடலுக்கு பொன்னிறத்தை தரும்.
முருங்கைக்கீரை: பசியின்மை, உள்சூடு, கண் நோய் நீங்கும்.
அகத்திக்கீரை: உண்பவருக்கு பிறரால் இடப்பட்ட மருந்தின் தீமை, பைத்தியம் நீங்கும்.உண்ட உணவு எளிதில் செரித்தல் முதலிய நன்மைகள் உண்டாகும். ஆனால், கடுவன் என்னும் நோயும் வாயுவும் வந்து சேரும்.
கலவைக்கீரை: மலச்சிக்கல், குடல்வாதம் ஆகியவை நீங்கும்.
பருப்புகீரை: சிறுநீரக வியாதிகள், உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப்படுதல், சரும நோய்கள், சீதபேதி ஆகியன தீரும்.
தூதுளை: காதுகேளாமை, காதெழுச்சி, காசம், நமைச்சல், பசித் தீ குறைவு, சளி, இருமல் ஆகியன நீங்கும்.
தற்காலத்தில் குழந்தை இன்மையால் வருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதில் ஆண்களுக்கு ஏற்படும் பல பிணிகளுக்கு நறுந்தாளி, நன்முருங்கை, தூதுணம், பசலை, அறுகீரை இவற்றுள் ஏதேனும் ஒன்றைப் புளி நீக்கிச் சமைத்து, நெய் சேர்த்துக் காலையில் மட்டும் நாற்பது நாட்கள் உண்ண நல்ல பலனைத் தரும். உடல் நலம் காக்க தினம் ஒரு கீரை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொண்டு நடைமுறைப்படுத்தி நோயற்ற நிறைவாழ்வு வாழ்வோம்.
மருத்துவர் ஜி. திருநாராயணன்