கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்க பல மாநில அரசுகள் இடம் இல்லாமல் தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு தரும் விதமாக, தனது பள்ளிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்ற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) முடிவு செய்துள்ளது. இதுபோன்ற சில தனிமைப்படுத்தும் மையங்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் சுமார் 15,000 நமது நாட்டில் உள்ளன. இந்த மையங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றி மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன இந்த அமைப்புகள். மேலும், அங்கு தங்கும் நோயாளிகளுக்கு சேவைகளை இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாவுராவ் தேவரஸ் விடுதி நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 50 நோயாளிகளுக்கு உணவு, மருந்து போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகள் ஆரோக்கியம் பெற ஏதுவாக யோகா உள்ளிட்ட உடல் செயல்பாட்டு பயிற்சிகளும் அங்கு இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன.