அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நிறை, குறை இருந்தால் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக அந்தந்த அரசு போக்குவரத்து கழகத்தின் இ-மெயில் முகவரி, வாட்ஸ்அப் எண்ணுடன் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்யும் திட்டத்தை அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகளிடம் மரியாதை குறைவாகப் பேசுவது, சரியான சில்லறை திருப்பித் தராதது, நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, அதிவிரைவு பேருந்துகளை அனைத்து இடங்களிலும் நிறுத்துவது, அலைபேசியில் பேசிக்கொண்டோ, அதிக வேகத்திலோ பேருந்தை இயக்குவது, பேருந்துகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படாதது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 80 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து பயணிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.