புல் நீல நிறம்

காட்டில் ஒரு கழுதை, அங்கிருந்த ஒரு புலியிடம் சென்று, ‘புல் நீல நிறமானது’ என்றது. அதற்கு புலி, ‘இல்லையில்லை புல் பச்சை நிறம்’ என்றது. சற்று நேரத்தில், இரண்டிற்கும் இடையிலான விவாதம் தீவிரமடைந்தது. இரண்டும் தனது கருத்துகளில் உறுதியாக இருந்தன. கடைசியில், இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர, காட்டின் அரசனான சிங்கத்திடம் சென்றன.

சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சிங்கத்திடம், புலி பேச ஆரம்பிக்கும் முன், ‘அரசே புல் நீல நிறமானதுதானே’ என கழுதை கத்த ஆரம்பித்தது. அதற்கு சிங்கம், ‘ஆம்! புல் நீல நிறம்தான்’ என்றது.

பெருமை கொண்ட கழுதை, ‘இதை இந்த புலி நம்பவில்லை. அதனால் புலியை நீங்கள் தண்டிக்க வேண்டும்’ என்றது. சிங்கமும் புலிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கியது. சிகத்தின் தீர்ப்பால் புலி அதிர்ச்சியடைந்தது. கழுதை சந்தோஷப்பட்டது.

புலி சிங்கத்திடம் சென்று, அரசே, ‘ புல் பச்சை நிறம் கொண்டதுதானே’ என்றது. ஆம்! புல் பச்சை நிறம்தான் என்றது சிங்கம். ‘பின்னர் ஏன் இப்படி தீர்ப்பளித்தீர்கள்’  என்றது புலி.

சிங்கம், ‘புல் நீல நிறம் அல்லது பச்சை நிறம் என்பதால் நீங்கள் தண்டிக்கப்படவில்லை. அந்த முட்டாள் கழுதையுடன் விவாதித்ததற்காகவே நீங்கள் தண்டிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களைப் போன்ற பலமான, தைரியமான, புத்திசாலித்தனமான ஒருவர் அந்தக் கழுதையுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்ததே தவறு. அது மட்டுமில்லாமல், அதற்கு தீர்ப்பு கேட்க இங்கு வேறு வந்துள்ளீர்கள்.’ என்றது.

கருத்து….

2021ல் உங்கள் வாக்குகளை நல்ல வேட்பாளரை மட்டுமே தேர்ந்தெடுத்து போடுங்கள். இதில் தவறிழைக்காதீர்கள். தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். இல்லையென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.