அரசு பேருந்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள்

எதிர் கட்சியாக இருந்தபோது ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனம், ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டம், பணி நிரந்தரம் என தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல நாடகமாடி ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, ஊதிய உயர்வை மறந்துவிடுங்கள், பழைய பென்ஷன் திட்டம் தரமுடியாது, அகவிலைப்படி எல்லாம் அப்புறம், நிரந்தர தொழிலாளர்கள் காலம் மலையேறி போச்சு என இவர்களை நம்பி ஓட்டுப்போட்ட மக்களிடம் தனது சுயரூபத்தை காட்டிவிட்டது. ஒப்பந்த ஆசிரியர்கள், ஒப்பந்த மின்சார தொழிலாளர்கள் வரிசையில் தற்போது, அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்கு கனரக போக்குவரத்து வாகன உரிமம் வைத்துள்ள 400 ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முடிவு செய்துள்ளது. ‘ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விரும்பும் தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், அதற்கான விண்ணப்ப படிவத்தை, சென்னை, பல்லவன் சாலை, விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளரிடம் செப்.12 வரை பெற்றுக் கொள்ளலாம். 400 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். அனைவரும் 24 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். கிளை மேலாளர் வழங்கும் பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒப்பந்த காலம் குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் கால அளவாகும்’ என இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.