ஊழலுக்கு எதிரான ஜி20 கூட்டம்

ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் பாரதத்தின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, ஹரியானாவின் குருகிராமில் இன்று முதல் 3ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஜி20 ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பால அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன் எப்போதும் இல்லாத பொருளாதார, புவி அறிவியல், கால நிலை சவால்களுக்கு மத்தியில் ஜி20 பாரதத் தலைமைத்துவம் பெற்றிருக்கிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள போது, சர்வதேச நிதி ஆணையம் மற்றும் இதர உலக நிறுவனங்கள், பாரதம் பிரகாசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு தெற்கு பிரிவுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் பாரதம் முக்கிய பங்காற்றும். ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் பாரதம் செயல்படும். ஜி20 பாரதத் தலைமைத்துவத்தின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம்’ (ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்) ஆகும். ஜி20 பாரதத் தலைமைத்துவம் பிரதமர் வழிகாட்டுதலின்படி, பணியாளர் மற்றும் பயிற்ச்சித்துறை ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தை நடத்துகிறது” என்றார். குருகிராமில் நடைபெறும் இந்த மூன்று நாள் நிகழ்வில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள், அழைக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள், 9 சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சர்வதேச அளவில் ஊழலுக்கு எதிரான செயல்முறை அமைப்பின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வார்கள். மேலும் பொருளாதார குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பின்தொடர்ந்து, வேகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வெளிநாட்டில் உள்ள அவர்களுடைய சொத்துக்களை பாரத சட்ட எல்லைகளுக்கு உட்பட்ட வகையில் கொண்டுவருவது போன்றவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.