கடந்த 2012ல் கேரள முதல்வராக காங்கிரசை சேர்ந்த உம்மன் சாண்டி பதவி வகித்தார். அப்போது அவர் மீது, சோலார் பேனல் எனப்படும் சூரிய மின் தகடுகள் பொருத்துவதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. மிகவும் பரபரப்பான இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர், உம்மன் சாண்டி உள்ளிட்டோர் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்ததாக, 2013ல் காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். இப்புகார் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எனினும் கேரள காவல்துறை இதனை மெத்தனமாக விசாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் பரிந்துரைத்திருந்தார். இதன்படி இந்த வழக்குகளை சி.பி.ஐ ஏற்றுக்கொண்டு விசாரணையை துவக்கியுள்ளது.