மகாராஷ்டிரா காவல்துறை 35 வயதான ஹிந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது குடும்பத்தை சித்திரவதை செய்து, அவர்கள் அனைவரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்திய நான்கு பேரை திங்கட்கிழமையன்று கைது செய்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 4ம் தேதி புட்டி, பிரேர்னா, பவுசாகேப் டோட்கே மற்றும் பாஸ்டர் ராகுல் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஐந்தாவது குற்றவாளியின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. முதல் தகவல் அறிக்கையின் படி, இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள சின்னார், நாசிக்கில் உள்ள தாவத் மாலா பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவர்கள் சித்திரவதை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அந்த பெண்ணை 2022 நவம்பர் முதல் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த பெண்ணும் அவரது கணவரும் கூலித் தொழிலாளிகள். அவர்களது மூன்று குழந்தைகளுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலை தேடி சங்கம்னேர், ராயதேவாடியில் இருந்து சின்னாருக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் பிழைப்புக்காக தற்காலிக வேலைகளைச் செய்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி அந்த பெண் வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறியதிபோது, குற்றம் சாட்டப்பட்ட புட்டி, பிரேர்ணா ஆகியோர் அவரை நிறுத்தி பேசினர். அதன்பேரில், உள்ளூரில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அவரை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மற்றொரு குற்றவாளியான பௌசாஹேப் இருந்தார். மூவரும் ஏசுவைப் பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் ஏதாவது தெரியுமா என்று கேட்டு அதனை பிரசங்கித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தினர். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று கூறினர்.
அங்கு வந்த பாதிரி ராகுல், அந்த பெண்ணுக்கு சிவப்பு நிற பானத்தை கொடுத்து, ஏசுவின் ரத்தம் என கூறி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தார். அதன் பிறகு, அந்த பெண் சுயநினைவை இழந்தார். பின்னர் ஒரு அரையில் அடைத்துவைத்து பவுசாஹேப் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் பாதிரி ராகுல், பௌசாஹேப் மேலும் பலர் என இது தொடர்ந்தது. பலாத்காரம் குறித்து யாரிடமாவது கூற முயன்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி கொடூரமான முறையில் தாக்கினர்.
இதனிடையே, அந்த பெண்ணின் கணவர், அவரை தேடிக்கொண்டிருந்தார், டிசம்பர் 17ம் தேதி, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார். அவருடன் அவரது இளைய மகனும் வந்திருந்தார். இருவரையும் மிரட்டி அங்கிருந்து செல்லுமாறு குற்றவாளிகள் கூறினர். ஆனால், பெண்ணின் கணவர் மறுத்ததால், பௌசாஹேப் சிறுவனைப் பிடித்து வைத்துக்கொண்டார். குழந்தையை அடித்து, தெருக்களில் பிச்சை எடுக்கும்படி கட்டாயப்படுத்தினார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவரது கணவர் மீண்டும் அங்கு வரவில்லை. பின்னர் ஒருவாறாக சிலரின் உதவியை பெற்று டிசம்பர் 29 அன்று அங்கு சென்று தனது மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றினார். ஒரு சமூக சேவையாளரின் உதவியை நாடி அவர் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார். அதனையடுத்து இந்த வழக்கு பிப்ரவரி 4 அன்று பதிவு செய்யப்பட்டது.