மே 22 அன்று பல்லுயிர் பெருக்கத்திற்கான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் பெருக்க பாதுகாப்பின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படும் இந்த நிகழ்வுக்கு இந்த ஆண்டு “அனைத்து உயிர்களுக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கட்டமைப்பு” என்பது மையப்பொருளாகும். இந்த சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தின் ஒரு பகுதியாக, சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் பார்வையிட இன்று உணவுப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி, பிற்பகல் 1 மணியிலிருந்து 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும். இக்கண்காட்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் திறந்துவைக்கிறார். மேலும், தேசிய அளவிலான நிகழ்சிகளையும் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வி. மெய்யநாதன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட உள்ளது. சுமார் 25 மாநிலங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில் 50 அரங்குகள் இடம்பெறுகின்றன. இவற்றிலிருந்து பல்வேறு மாநிலங்களின் உள்ளூர் உணவு வகைகள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.