தான் படித்த கல்லூரி ஹாஸ்டலை சுமார் 32 வருஷம் கழித்து Webexல் காணப்போகும் படபடப்புடன் இருந்தார் என் கணவர். எல்லாருமே ஆவலுடன் எதிர்நோக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!ஆனால் மகிழ்ச்சிக்கு மாறாக இனம்தெரியாத கலக்கம். வடுவாகப் பதிந்துவிட்ட சம்பவங்கள், அந்தக் காயங்களால் ஏற்பட்ட வலி என்று உணர்ச்சிக்குவியலாக இருந்தார். ஆம்! 31+ வருடங்களுக்கு முன் உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடி வந்தவர்…
1986ல் இளைஞனுக்கே உரிய கல்லூரிக் கனவுகளுடன் ஸ்ரீநகர் ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் நுழைந்தவர் இவர். சில நாட்களிலேயே கனவு கலையத் தொடங்கியது. ராகிங் என்ற பெயரில் நள்ளிரவு 2 மணி வரை அடித்து உதைத்து, அடி வயிற்றில் மிதித்து ‘ பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்லுமாறு துன்புறுத்தினார்களாம்.
சில மாணவர்கள் உயிர் பயத்தில் ‘பாகிஸ்தான் வாழ்கன்னு’, சொல்லிவிட்டு 50 சதவீத சலுகையோடு தப்பித்த நிலையில் (அதாவது, அடி உதை இரவு 10 மணிவரை மட்டுமே), ஏதோ ஒன்று இவரைத் தடுத்தது பாகிஸ்தான் வாழ்கன்னு சொல்லவிடாமல்.உடலில் பலமில்லாவிட்டாலும் உள்ளத்தின் பலம்தான் அது. நினைத்தால் ஓடிவரும் தூரமா? இல்லை இன்றுபோல் இணையம், அலைபேசி வசதி தான் உண்டா.. பெற்றோரிடம் புலம்ப, ஆறுதல் தேடக் குரலையாவது கேட்க? அதனால் பொறுத்துக்கொள்ளப் பழகினார்.
ஆர்.இ.சி. பற்றித் தெரியும்தானே? 50 சதவீத ஒதுக்கீடு உள்ளூர் மாணவர்களுக்கு; மீதி 50 சதவீதம் பிற மாநில மாணவர்களுக்கு. அதில் தமிழகத்திலிருந்து போன பத்து அப்பிராணி மாணவர்களுள் இவரும் ஒருவர். அந்த உள்ளூர் மாணவர்களுள் பலர் பாரத தேசத்தின்மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். எப்போதும், நினைத்தால் வன்முறை, நொடியில் உயிர்ப் பலி என்று ரணகளமாகவே இருந்தது கல்லூரிச் சூழல். முதலாமாண்டு, முதல் செமஸ்டர் முடிந்தவுடனேயே உள்ளூர் மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, அடிதடியாகி போலீஸ் கல்லூரிக்குள் நுழைந்து கண்ணீர்ப்புகை வீசி கலவரத்தை அடக்கி……அப்பப்பா! கல்லூரி மூடப்பட்டது.
மூன்று மாதம் கழித்துத் திறந்தபோது பிற கல்லூரிகளில் மூன்றாம் செமஸ்டர். இந்தக் கல்லூரியில் ஆறு மாதம் தாமதமாக இரண்டாம் செமஸ்டர் நடைபெற்றது. அதன்பிறகு கலவரமும் கலாட்டாவும் சகஜமாகிப்போனது.
வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் போதே சர்வசகஜமாக பெட்ரோல் குண்டு கல்லூரிக்குள் வீசுவார்களாம். இரண்டாம் ஆண்டு நடுவில் ஒருமுறை நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்றி ருக்கிறார். அறுசுவை உணவுடன், அரட்டை, அட்டகாசம், ஆனந்தம் என இளமை பட்டாளம் குதூகலித்துக் கொண்டிருக்க திடீரென ‘டொம்’ என வெடிச்சத்தம். எட்டிப்பார்த்தால் கூச்சல் குழப்பம். மக்கள் இங்கும் அங்குமாக சிதறி ஓட நொடிப்பொழுதில் ராணுவம் வந்துவிட்டது. நிலைமை கட்டுக்குள் வந்ததும், ஹோட்டலிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறிய நண்பர்கள் ஆளரவமற்ற ஒரு வீதியில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவற்றின் பின்னால் ஒளிந்திருந்து, பின்னர் பீதியுடனே ஹாஸ்டலை அடைந்தனராம். இன்னொரு நாள் இவர் மட்டும் தனியாக ஹோட்டலுக்குப் போய் இதேபோல் மாட்டிக்கொண்டார்.
வழக்கமாக இரவு ஓன்பதரை மணிவரை பஸ்கள் இயங்கும். அன்றைய கலவரத்தில் பஸ்கள் எட்டு மணிக்கே நிறுத்தப்பட்டன.திடீரென ஊரே ஸ்தம்பித்தது. கும்மிருட்டு, அமானுஷ்ய அமைதி, டிசம்பர் குளிர். ஹோட்டலிலிருந்து ஹாஸ்டல் 10 கி.மீட்டர்.கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் நடந்தே வந்திருக்கார். திடீரென ஒரு கார் சினிமாபோல இவரருகே வந்து பிரேக் போடுகிறது. உள்ளே இருந்தது காஷ்மீர்காரர்தான்.. மிகக்கனிவாகக் கடிந்துகொண்டார் – இந்த மாதிரி தனியா வந்து மாட்டிக்கலாமா என்று. அதோடு விடவில்லை. கல்லூரி ஹாஸ்டல் வரை தானே காரில் கொண்டுவந்து விட்டார். இறைவன் அவருருவில் என்றால் மிகை ஏது! எல்லா காஷ்மீரி முஸ்லிமும் தீவிரவாதிகள் இல்லை என்று உணர்த்திய தினம் அது. இறைவன் நமக்கு அளித்த கொடையே காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்.
ஆனால், அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிதைத்தது மனிதனின் வக்ரம். அடிதடி, அமர்க்களம், அடிக்கடி 144, போலீஸார், ராணுவ ரோந்து என்று ஏற்கனவே இயல்பு நிலையை இழந்திருந்த ஊரில் பெரும் கலவரம் வந்தால்? வந்தது.. ௧,1989ல். அதன் விளைவாகத் தான் இனி உடனடியாக கல்லூரி திறக்க வாய்ப்பே இல்லை என்று போட்டது போட்டபடி, பெட்டிப் படுக்கை புஸ்தகம் மட்டுமா, 12வது மார்க் ஷீட், 3வது செமஸ்டர் சான்றிதழ் எதுவுமே எடுக்காமல் தப்பித்து ஓடிவந்தார் திருச்சிக்கு. மீண்டும் ஒருவருடக் காத்திருப்புக்குப்பின் திருச்சி ஆர்.இ.சி.யில் படிப்பை முடித்தது வேறு கதை.
காஷ்மீர் என்ற பெயரைக் கேட்டாலே இந்த பயங்கர சம்பவங்கள் மட்டுமே நினைவு வரும் அவருக்கு. இணையதள சந்திப்பு தொடங்கி சில நிமிடங்களிலேயே ஒரு சிலிர்ப்பு. பரம சந்தோஷம். நம்ப முடியாத ஆனந்தம்.காரணம்? கல்லூரி வளாகத்திலிருந்து கலந்துகொண்ட தேர்வுக் கண்காணிப்பாளர், ரிஜிஸ்ட்ரார், துறைத் தலைவர்கள், முதல்வர், பேராசிரியர்கள் என அனைவருமே (எல்லாருமே இஸ்லாமியர்கள் தாம்) தங்கள் உரை நிறைவில் ‘ஜெய்ஹிந்த்’ என அழுத்தம் திருத்தமாகக் கூறியதுதான். அது என் கணவரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது நிஜம், மிகையில்லை. இந்த மாபெரும் மாற்றத்துக்கு யார், எது காரணம்?வேற யாரு? துணிச்சலாக அரசியல் சாஸனம் 370ஐத் தூக்கியெறிந்த மோடி – ஷா தான் என நினைக்கிறேன்.
-ப்ரியா ராம்குமார்