பாரதத்தில் இயற்றப்படவுள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்
ரிலே மூர் விமர்சனம் செய்துள்ளார். இந்தக் கருத்துக்களை வெளிநாட்டு நிதியுதவியை ஒழுங்குபடுத்துவதில் வாஷிங்டன் கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாடு என்று ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முகவர்கள் மற்றும் வெளிநாட்டு நிதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
அமெரிக்காகாவில், வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டம் ( FARA ) 1938லிருந்து அமலில் இருக்கிறது. கடுமையான இச்சட்டங்கள் எதிர்க்கப்படாத நிலையில் பாரதத்தின் சட்ட முன்வடிவு எதிர்க்கப்படுவது தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்கள் தங்களைப் பதிவுசெய்து தங்கள் செயல்பாடுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என இச்சட்ட முன் வரைவு கோருகிறது. இதனை மீறுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை உட்பட உரிமையியல் மற்றும் குற்றவியல் தண்டனைகள் விதிக்கப்படலாம்.
இதே போன்று, வெளிநாட்டு செல்வாக்கு வெளிப்படைத்தன்மை திட்ட சட்டத்தை 2018 முதல் ஆஸ்திரேலியா செயல்படுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அந்நிய நிதி மூலம் வரும் வெளிநாட்டு செல்வாக்கை கண்காணிப்பதுடன், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செல்வதையும் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கென தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு செல்வாக்குப் பதிவுத் திட்டத்தை (FIRS) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வெளிநாட்டு சக்திகள் சம்பந்தப்பட்ட சில அரசியல் செல்வாக்கு ஏற்பாடுகள் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கூட பெறப்படும் நிதி எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது அரசாங்கத்தின் தணிக்கைக்குட்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பாக அரசாங்க முடிவுகளில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான பொதுப் பதிவேட்டை கனடா அரசு சட்டமாக்கியுள்ளது.
மேலும் அரசின் முடிவுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துவதை வெளிப்படையாக கண்காணிக்கும் வகையில் புதிய சட்டத்தையும் கனடா அரசு கொண்டு வந்துள்ளது.
இஸ்ரேலின் அரசு சாரா நிறுவன வெளிப்படைத்தன்மை சட்டம், தங்களின் நிதியில் பெரும்பகுதியை வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பெறும் அமைப்புகள், அத்தகைய நிதியுதவியை தங்களின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகள் மற்றும் அறிக்கைகளில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கூறுகிறது.
சிங்கப்பூரின் வெளிநாட்டுத் தலையீடு (எதிர் நடவடிக்கைகள்) சட்டம் அந்நிய நிதி மூலம் ஏற்படும் வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளது.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கடுமையான அந்நிய நிதி பெறும் சட்டங்களை செயல்படுத்தி வரும்போது பாரதமும் அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகள் எதிர்ப்பது ஏன்? பாரதம் யாருக்கும் சந்தைக் கடை அல்ல என்பதை உணர வைக்கும் நேரம் இது.
கட்டுரையாளர் : ஈரோடு சரவணன்