ஸ்வீடனை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், விவசாய போராட்டங் களை சர்வதேச அளவில் திட்டமிட்டு ஒருங்கிணைப்பது குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இதனால் விவசாய போராட்டம் சர்வதேச சதி என்பது பொதுமக்களுக்கும் தெரியவந்தது. கிரெட்டா அதனை அழித்தாலும், அவரின் பதிவுகள் அடங்கிய டூல்கிட் கூகுள் வழியாக அரசுக்கு கிடைத்தது. இதனை ஆராய்ந்த புலனாய்வுத்துறை, பாரத அரசுக்கு எதிராக சமூக, கலாச்சார, பொருளாதார யுத்தங்களை நடத்துவதற்காக இந்த டூல்கிட்டை ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் அறக்கட்டளை’ என்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் உருவாக்கினர் என கண்டறிந்தனர். அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. மேலும் பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற பெண் இதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர்தான் கிரெட்டா தன்பெர்க்கை டூல்கிட் ஆவணத்தை அகற்றுமாறு உடனடியாக எச்சரித்தார். அந்த கூகிள் ஆவணத்தின் ஆசிரியர், ஆவணத்தை உருவாக்குதல், திருத்துதல், பரப்புவதில் முக்கிய சதிகாரராக திஷா செயல்பட்டுள்ளார். இதற்காக அவர் வாட்ஸ்அப் குழுவை தொடங்கியுள்ளார். ஆரம்பகட்ட விசாரணையில் அவர் எடிட்டிங் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் ‘பிரைடேஸ் பார் பியூச்சர் இந்தியா’ என்ற குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது, திஷா ரவி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில், மும்பையை சேர்ந்த நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோருக்கு எதிராகவும் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.