அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். ”இரண்டு குழந்தைகளோ அல்லது அதற்கு குறைவாகவோ பெற்றிருந்தால்தான் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும். அதிக குழந்தைகள் இருந்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது” என்று அஸ்ஸாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதைப்போல, உத்தரப்பிரதேச அரசும் ‘‘இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது. அது மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும்” என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டி இருக்கிறது. இது தொடர்பான சட்டவரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் உத்தரப் பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது என ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது 1970களின் மத்தியில் சஞ்சய் காந்தி பழைய டெல்லி பகுதியில் கட்டாய கருத்தடையை அமலாக்கினார். இது முற்றிலுமாக தோற்றுப்போனது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் மீது திருப்பிப் பாய்ந்தது. இதனால்தான் அரசுகள் இரண்டு குழந்தை கொள்கையை சட்டரீதியாக அமலாக்க தயக்கம்காட்டி வருகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்ட்ரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள். அதுமட்டுமல்லாமல் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கவும் தகுதியற்றவர்கள் என்பதாக சட்டங்கள் இயற்றப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தில் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன் சட்டத்தைக் கொண்டுவந்து விட்டால் அது தேர்தலில் முக்கிய பிரச்சனையாக எதிரொலிக்கும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தடை விதித்தாலோ அல்லது அரசின் திட்டங்களை பெற தகுதியற்றவர்கள் என்று கூறினாலோ இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்கிடமான பிரச்சனையை நிதானமாகவும் தெளிவாகவும் அணுகவேண்டும். சட்டரீதியாக பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டவரைவை செம்மைப்படுத்தவேண்டும். எந்தெந்த அம்சங்கள் குறைபாடுகள் என்று விமர்சிக்கப்படும் என்பதை முன்கூட்டியே நன்கு அறிந்து, குறைபாடுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் சட்டவரைவில் வார்த்தைகளை தெளிவாகவும் தீர்க்கமாகவும் இடம் பெறச்செய்யவேண்டும்.
பாரத அரசியல் சாஸனத்தின் மூன்றாவது பிரிவுக்கு (அடிப்படை உரிமைகள்) புறம்பான வகையில் சட்டவரைவில் வாசகங்கள் இடம் பெறக்கூடாது. நோக்கம் நல்லதுதான் என்ற போதிலும் அது சட்டப் பிரச்சனையில் சிக்கி செயலிழந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும். கடந்தகால அனுபவத்தை உள்ளீடாகக் கொண்டு, இரு மாநில அரசுகளும் சரியான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற கருத்தை உள்ளடக்கிய சிறப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அண்மையில் குடும்பக் கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டுவரக்கோரி உச்ச நீதி மன்றத்தில் மனுதாரர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ”பாரதத்தில் குடும்பக்கட்டுப் பாட்டுத்திட்டம் சம்பந்தப்பட்ட நபர்களின் சுய விருப்பம் சார்ந்தது. தம்பதியர் எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பதையும் எத்தகைய குடும்ப கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பதையும் தாங்களாகவே முடிவு செய்துகொள்ளலாம். இதில் எவ்வித கட்டாயத்துக்கும் இடம் இல்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1994ம் ஆண்டு மக்கள்தொகை, மேம்பாட்டுக்கான சர்வதேச மாநாட்டின் செயல் திட்ட பிரகடனத்தில் பாரதமும் கையெழுத்திட்டுள்ளது. இந்த பிரகடனம் எவ்வகையிலும் கட்டாயப்படுத்துவதில்லை, ஏற்கவில்லை என்பதையும் பாரத அரசு மேற்கோள் காட்டியிருந்தது. சர்வதேச அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் கூட கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமலாக்கினால் அது எதிர்பார்த்தற்கு மாறாக விளைவையே ஏற்படுடத்துகிறது. பாலின விகிதாச்சார பிறழ்வுக்கு வழிவகுக்கிறது.
மக்கள்தொகை வெகுவேகமாக பெருகி வருகிறது. இப்பின்னணியில் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினரும் இது தேவை என்று மற்றொரு தரப்பினரும் அறிவியல்ரீதியாகவும் சட்டரீதியகாவும் சமூக ரீதியாகவும் அறரீதியாகவும் வாதிட்டு வருகின்றனர். எனவே, உ.பி., அஸ்ஸாம் மாநில அரசுகள் எவ்வாறு சட்ட வரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கின்றன என்பதை பார்த்த பிறகே அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியும். பாரதத்துக்கு குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் தேவைதான் என்று நாங்கள் கருதுகிறோம். ஏனெனில், மக்கள்தொகை அதிகரித்து வருவதால் வளப்பகிர்வு சிக்கலாகிறது. இயற்கை வளமும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வளமும் நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஏதேனும் ஒருவகையில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முன்னெடுப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதே நேரத்தில் கள நிலவரத்தை கருத்தில்கொண்டு நிதானமாக செயல்படவேண்டும். வளப்பகிர்வு சார்ந்த அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இதை பல்வேறு தரப்பினரும் உணராமல் இல்லை. மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால் வளப்பகிர்வை சிறப்பாக மேற்கொள்ள முடியும். எனவே, அரசு இதில் கவனத்தை செலுத்தவேண்டியது அவசியம். உ.பி., அஸ்ஸாம் அரசுகள் கொண்டுவர இருக்கும் சட்டங்கள் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் இருக்கவேண்டும். இதன் அடிப்படையிலேயே மற்ற மாநிலங்களும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முன்னெடுப்பைச் சுலபமாக மேற்கொள்ளமுடியும்.
கட்டுரையாளர்கள்: வழக்கறிஞர்கள் ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி