பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 18 பேர்களை கொன்ற கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். பல்வேறு வகைகளில் ஆராய்ந்து, நியதிகளை பின்பற்றி, தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனினும் இவ்வழக்கில், உச்ச நீதிமன்றம் அவரை எந்த இடத்திலும் நிரபராதி என குறிப்பிடவில்லை. ஆனால், குற்றவாளியான அவரை, தி.மு.க அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பேரறிவாளனை விமான நிலையம் சென்று வரவேற்பது, கட்டிப்பிடித்து அன்பை பொழிவது எல்லாம் தி.மு.க நிகழ்த்தும் ஒரு தவறான முன்னுதாரண செயல். இதன் மூலம் அவர்கள் ஏதோ சாதனை செய்தது போலவும், நிரபராதிகள் போலவும் தி.மு.க காட்டுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல், பேரறிவாளனை பரோலில் அனுப்பி, அதனை நீட்டித்து நீட்டித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. இதனால், ஸ்டாலினும் அமைச்சர்களும் அரசியலமைப்பு சட்டத்தின் படி சத்தியப் பிரமாணம் செய்துதான் ஆட்சி நடத்துகின்றனரா என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி, தனது சித்தாந்தத்திற்கே சவால் விடுக்கும் தி.மு.கவின் கூட்டணியை முறித்துக்கொள்வதை விடுத்து, ஒப்புக்கு சப்பாணியாக ஒரு மணி நேரம் வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்திவிட்டு, மறுநாள் என்.பி சீட்டுக்காக தி.மு.கவின் வாயிற்படியில் சென்று நிற்போம் என்று செயல்படுகிறது. இது அவர்களின் நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியினரின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது’ என தெரிவித்தார்.