போலி வீடியோ கும்பல் கைது

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய நபரான பீகாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராக காட்டிக்கொண்டு தனது யூடியூப் சேனலில் பல போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு லட்சக் கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது. வருமானத்தை மேலும் கூட்டுவதற்காக போலியான காட்சிகளை படம் பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக, பாட்னாவின் ஜக்கன்பூர் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தாக்குதலால் படுகாயம் அடைந்தது போல இருவருக்கு வேடமிட்டு அவர்கள் தாங்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக பேசி நடிக்க வைத்துள்ளார். இந்த காட்சிகள் மார்ச் 8ல் ஹோலி அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. (எனினும் இந்த பிரச்சனை தமிழகத்தில் இதற்கு முன்பாகவே துவங்கிவிட்டது என்பதும் இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது). இந்த சூழலில், இது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட மூவர் மீது பீகார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கில் தற்போது ராகேஷ் திவாரி என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். மணிஷ் மீது 30 போலி காட்சிப் பதிவுகளை பதிவேற்றம் செய்தது உட்பட மேலும் 7 வழக்குகள் உள்ளன. மணிஷ் மற்றும் ராகேஷ் மீது தமிழகத்தின் கிருஷ்ணகிரியிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக காவல்துறையினர், பீகாரில் கைதான ராகேஷ் திவாரியை கிருஷ்ணகிரி அழைத்துவந்து விசாரணை நடத்த உள்ளனர்.இந்த வழக்கில், தமிழகத்தில் வட மாநில தொழிலாலர்கள் தாக்கப்படுவதாகக்கூறி போலி வீடியோ தயாரித்து வெளியிட்டு அதனை சமூக ஊடகத்தில் பரப்பிய ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார் என்ற இளைஞரையும் தமிழக சைபர் க்ரைம் காவல்துறையினர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். அங்குள்ள லேட்டஹக் மாவட்ட உட்கோட்ட நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற உத்தரவின்பேரில் திருப்பூர் அழைத்து வரப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.