ஆப்கனிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறாமலேயே முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் ஆப்கன் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. அமெரிக்காவின் அனைத்து ராணுவத்தினரும் ஆப்கனில் இருந்து வெளியேறிவிட்டனர். கடைசி ராணுவ வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ அமெரிக்ககடைசி போர் விமானமான சி-17ல் காபூலில் இருந்து வெளியேறினார். இதனை, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். அமெரிக்க ராணுவம் வெளியேறியதன் மூலம் முழுமையான சுதந்திரம் பெற்று விட்டோம் என தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் தெரிவித்தார். அதே சமயம், அமெரிக்க ராணுவத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த ஆப்கன் வேலையாட்களில் பலரை நிராதரவாக தலிபான்களின் கைகளில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்காக உழைத்த 51 மோப்ப நாய்களையும்கூட அமெரிக்கர்கள் நிராதரவாக விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவற்றை மீட்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ராணுவத்தினர் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.