நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி மாணவ செல்வங்களுக்காக வருடம் தோறும் நடத்தும் ‘பரிக்ஷா பெ சர்ச்சா 2021’ (தேர்வுகள் ஒரு பிரச்னை அல்ல 2021) என்ற நிகழ்ச்சி நேற்று இரவு 7:00 மணிக்கு துவங்கி நடைபெற்றது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்தமுறை இந்நிகழ்வு மெய்நிகர் பயன்முறையில் நடைபெற்றது. பரீட்சை மன அழுத்தத்தைக் குறைப்பது குறித்து பிரதமரும் மாணவர்களும் பேசினர். முன்னதாக, இதில் கலந்துகொள்ள சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான போட்டியில் 10.5 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். முதன்முறையாக, 81 வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த ‘பரிக்ஷா பெ சர்ச்சா’ போட்டியில் பங்கேற்றனர். இவர்களுடன் இதில் கலந்துகொள்ள 2.6 லட்சம் ஆசிரியர்கள், 92,000 பெற்றோர்களும் கூட விண்ணப்பித்திருந்தனர். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் உட்பட 32 சேனல்கள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு தளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.