மகப்பேறு நிதியுதவி நிறுத்தமா? 2 ஆண்டாக கிடைக்காததால் சந்தேகம்

கர்ப்பிணியருக்கான மகப்பேறு நிதியுதவி இரண்டு ஆண்டுகளாக கிடைக்காததால், அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கர்ப்பமுற்ற பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், இந்த நிதி, இரண்டு ஆண்டுகளாக கிடைப்பதில்லை என, கர்ப்பிணியர் குற்றம் சாட்டுகின்றனர். இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களுக்கு பதில், ஒரு பெட்டகம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் உள்ள சில பொருட்களும் காலாவதியான நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரசவித்த பெண் ஒருவர் கூறியதாவது: நிதியுதவி திட்டத்தில், முதல் தவணையை மத்திய அரசு வழங்குகிறது. அது தாமதமாவதால், மாநில அரசின் நிதியுதவியும் தாமதமாவதாக கூறுகின்றனர். எனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகிறது. பரிசோதனை முதல் பிரசவம் வரை அரசு மருத்துவமனைகளில் தான் பார்த்தோம். அதேபோல், குழந்தைக்கான தடுப்பூசியும் அரசு மருத்துவமனையில் தான் போடப்படுகிறது. என்னுடன் பிரசவித்த யாருக்குமே, நிதியுதவி வழங்கப்படவில்லை. செவிலியர்களைக் கேட்டால், ‘நிதியுதவி அளிப்பதில் இரண்டு ஆண்டுகளாக சிக்கல் உள்ளது’ என, கூறுகின்றனர். எனவே, கர்ப்பிணியருக்கான நிதியுதவி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இணையதளத்தில் சில தகவல்கள் மாறுபட்டால், நிதியுதவி கிடைக்காமல் இருக்கலாம். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.