எலானின் சொத்து டுவிட்டர்

முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரின் 100 சதவிகித பங்குகளை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கவுள்ளார் எலான் மஸ்க். இதன் மூலம், இதுவரை முன்னணி மின்சார வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலான் மஸ்க், தற்போது முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிபராகவும் மாறியுள்ளார். டுவிட்டர் ஒரு பங்கின் விலையாக பங்குதாரர்களுக்கு 54.20 டாலர்கள் கிடைக்கும். டுவிட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார்? என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் அதிகபட்சமாக பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பவர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது அதன் முழு உரிமையாளராகி விட்டார். கொரோனா தொடர்பாக அவர் பதிவிட்ட கருத்துக்களை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அவர் அடிக்கடி டுவிட்டர் மீது முன்வைத்த குற்றச்சாட்டு, டுவிட்டரில் கருத்துகளுக்கான சுதந்திரம் இல்லை என்பதுதான். அவரை பின்தொடர்பவர்களும் அதனை ஆமோதித்து வந்தனர். டுவிட்டரில் அதிக முறை ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் எலான் மஸ்க்கின் டுவிட்டர் பக்கம் முக்கியமானது. இப்படி, இதுவரை டுவிட்டருக்கும் எலானுக்குமான உறவு அவ்வளவு இனிப்பானதாக இருந்ததில்லை.

இம்மாதத் தொடக்கத்தில் டுவிட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்கை நிர்வாகக் குழுவுக்கு அழைத்தார் டுவிட்டரின் சி.இ.ஓ பராக் அகர்வால். அப்போது எலான் மறுத்துவிட்டார். ஆனால், இப்போது 100 சதவிகிதத்தை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில், சி.இ.ஓ பராக் அகர்வால், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட டுவிட்டரின் தலைவிதி மொத்தமும் இனி அவரின் கையில். முன்னரே எலான் குறிப்பிட்டதைபோல, டுவிட்டரில் கருத்து சுதந்திரத்தை அதிகரிப்பதுடன் எடிட் செய்யும் வசதியை கண்டிப்பாக கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். டுவிட்டரில் ஏற்கெனவே சில பகுதிகள் மட்டும் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் எளிதாக அணுகக்கூடிய மென்பொருளாக இருக்கும் நிலையில் டுவிட்டர் இனி முழுக்கவே ஓப்பன் சோர்ஸாக மாறலாம். டுவிட்டரில் உள்ள ஸ்பேட் பாம்ஸ் எனப்படும் மூட்டை பூச்சிக்களை ஒழிப்பதை எலான் தீவிரப்படுத்தலாம். எது எப்படியோ, எலான் பதிவிடும் டுவீட்டுகளை இனி யாராலும் நீக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது.