வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என அரசு அறிவித்திருந்தபோதும், வரதட்சணை வாங்குவது நடந்துகொண்டுதான் உள்ளது. அதனை முற்றிலும் தடுக்கவோ ஒழிக்கவோ முடியவில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில், “இந்திய கிராமப்புறங்களில் வரதட்சணை பரிணாமம்: 1960-2008” என்ற தலைப்பில் ஒரு ஆய்வை எஸ். அனுக்ரிதி, நிஷித் பிரகாஷ், சுங்கோ க்வோன் ஆகிய பொருளாதார வல்லுநர்கள் குழுவினர் பல ஆண்டுகளாக நடத்தினர். மக்கள்தொகை விகிதாசாரத்தை ஒட்டி, 17 மாநிலங்களில் 40,000 திருமணங்களிலிருந்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டது. அந்த முடிவு கடந்த ஜூன் 30ல் வெளியானது. அந்த ஆய்வு முடிவுகள் பல அதிர்ச்சித் தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆய்வில் 95 சதவீத திருமணங்களில் வரதட்சணை வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வரதட்சணை ஹிந்து மதத்தில் மட்டுமே பெறப்படுகிறது என்ற கட்டுக்கதையை இந்த ஆய்வு முடிவு உடைத்தெறிந்துள்ளது. ஆய்வின்படி, கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும்தான் அதிகமாக வரதட்சணை வாங்கியுள்ளனர். ஹிந்துக்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் அதிகமாக வரதட்சணை வாங்கியுள்ளனர். என இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.