நமது நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி தெரியும். ஆனால் அதை தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவார் பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற இந்த பிரம்மாண்டமான இயக்கத்தின் அஸ்திவாரமாக தன்னை அமைத்துக்கொண்டவர் டாக்டர் ஹெட்கேவார்.
அவருடைய பெயர் கேசவன். தந்தை பெயர் பலிராம். குடும்பப் பெயர் ஹெட்கேவார். அவருடைய முழுப்பெயர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவர் டாக்டருக்கு படித்திருந்தார். டாக்டர் ஹெட்கேவார் என்று அழைப்பார்கள். இன்னும் சுருக்கமாக டாக்டர்ஜி என்றே அழைத்தனர்.
டாக்டர்ஜி பிறவியிலேயே தேசபக்தர். இளம் வயதிலேயே (வயது 9) பள்ளியில் விக்டோரியா மகாராணி பிறந்த நாளுக்கு வழங்கிய லட்டுவை வீசியெறிந்தார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது கல்வி அதிகாரி வருகை சமயத்தில் மாணவர்களைத் திரட்டி வந்தேமாதரம் முழங்கியதற்காக பள்ளியை விட்டு நீக்கப்பட்டார். கல்கத்தாவில் தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். திருமணம் செய்துகொள்ளாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். சிறை சென்றார்.
ஆங்கிலேயனைத் துரத்த வேண்டும் என்று எல்லோரும் போராடி வந்த நேரத்தில் ஆங்கிலேயன் எப்படி வந்தான் என்று சிந்தித்தார். நமது நாட்டின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினார்.
ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததுதான் தேசம் அடிமைப்படக் காரணம் என்பதை உணர்ந்தார். அதனால் ஹிந்துக்களிடையே ஒற்றுமையை உருவாக்க 1925ல் விஜயதசமி அன்று நாகபுரியில் இளம் மாணவர்கள் சிலரை வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் துவக்கினார்.
கடந்த 95 ஆண்டுகளாக இடையறாமல் வளர்ந்து
பரவி, நாடுநெடுக சுமார் 60,000 கிளைகள் கொண்டதாக ஆலமரமாக விழுதுவிட்டு ஓங்கி நிற்கிறது சங்கம். இப்போது தரிசியுங்கள் சங்க சிற்பியான டாக்டர்ஜி எனும் ஆளுமையை.