சென்னை மண்ணடியில் உள்ளது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம். இந்த அமைப்பின் தலைவராக சமீபத்தில் ஹைதர் அலி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய பேனரை கட்சி அலுவலகம் முன்பு த.மு.மு.க நிர்வாகிகள் மாட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரண்ட மனிதநேய மக்கள் கட்சியின் 100க்கும் மேற்பட்டோர், த.மு.மு.க அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பேனரை அடித்து நொறுக்கினர். கட்சி அலுவலகத்தையும் சூறையாடினர். மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் தாக்கியதில் தமுமுகவினர் 2 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து பேசிய த.மு.மு.க நிர்வாகிகள், த.மு.மு.க-வை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்பிய ம.ம.க தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாகவும், இதற்கு காவல்துறையினர் துணையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினர். இத்தாக்குதலை கண்டித்து, தமிழகம் முழுவதும் த.மு.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று. தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு, பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.