தீபாவளி பண்டிகையையொட்டி, மாசுக்கட்டுப்பாடு என்ற பெயரில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு 2021ல் அனைத்து வகையான பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கு முழு தடை விதித்தது. அதையடுத்து பட்டாசு விற்பனையாளர்கள் ‘பாரதத்தில் தீபாவளி கொண்டாடாமல் பாகிஸ்தானிலா தீபாவளி கொண்டாடப்படும்? என்று டெல்லி அரசின் பொறுப்பற்ற முடிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். பட்டாசு தடை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு பிரச்னை தற்காலிகமானதுதான். இதில் முக்கியமான விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்பானது என்றும் கூறியிருந்தது. தற்போது நீதிமன்ற கணிப்புகளை மெய்ப்பிக்கும் விதமாக, டெல்லி ஐ.ஐ.டி நடத்திய ஆராய்ச்சி முடிவுகள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளன. இந்த ஆய்வில், ‘குளிர்காலத்தில் விவசாயிகள் எரிக்கும் விவசாய கழிவுகள், வெப்பத்திற்காக மக்கள் மரக்கட்டைகள், சுடுகாடு எரித்தல் போன்றவைதான். இவை பயோமாஸ் என அழைக்கப்படும். மேலும், நிலக்கரி எரிப்பு, வாகனப்புகை, தொழில்துறை மாசுபாடு, தூசித் துகள்கள் போன்றவையும் இதில் பங்கு வகிக்கின்றன’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, ‘தீபாவளி பட்டாசுகளின் விளைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. பட்டாசுகளில் இருந்து வரும் மாசுபாடுகள், பயோமாஸ் எரிப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. பட்டாசுகளின் உமிழ்வுகள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளைக் கொண்டிருந்தாலும், உயிரினங்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு அது நீடித்த நிகழ்வல்ல. தீபாவளிக்குப் பிறகு சுமார் 12 மணி நேரத்திற்குள் பட்டாசுகளின் தாக்கம் குறைந்துவிடுகிறது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.