மங்களகரமான நாட்களில் பத்திர பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என முதன்மை செயலாளர் பத்திரப்பதிவு அலுவலங்களுக்கு பீலா ராஜேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் தமிழக கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் போன்று உள்ளது இந்த அறிவிப்பு. அதிக கட்டணமே தவறு எனும்போது, இந்த அறிவிப்பு மேலும் மக்களின் அதிருப்தியைத் தான் சந்திக்கும்.
தைப்பூசம் அன்று அரசு விடுமுறை அறிவித் துள்ள நிலையில், அன்று பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்கச் சொல்கிறார் முதன்மை செயலாளர். சரி, அரசு நிர்வாகத்திற்குள் நாம் போவானேன், ஒரு பாமரனாக சில கேள்விகள்.
1. மங்களகரமான நாட்கள் என்பதை யார் தீர்மானிப்பார்கள்?
2. மங்களகரமான எனும் வார்த்தையை ஹிந்துக்கள் தவிர்த்து வேறு யாரும் பயன்படுத்துவதில்லை. தைப்பூசம், பங்குனி உத்திரம், அட்சய திருதியை சுப நாட்கள், அன்று பதிவு செய்தால் ப்ரீமியம் கட்டணம் என்றால் பிற மத பண்டிகை நாட்களான கிறிஸ்துமஸ் அசுப நாட்களா?
3. ஒரு நாத்திகனுக்கு அஷ்டமியும் ஒன்று தான், அமாவாசையும் ஒன்றுதான். அவர் தனக்கு விருப்பப்பட்ட நாளில் பதிவு செய்ய எதற்கு கூடுதல் கட்டணம்?
4. பணம் உள்ளவர்கள் சுப நாட்களில் பதிவு செய்யட்டும், முடியாதவர்கள் வேறு நாளில் வாருங்கள் என்று மக்களையும் பாகுபாடு பார்ப்பது நியாயமா?
5. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்த பங்குனி உத்திரம், அட்சய திரிதியை எதுவும் கிடையாது. இரண்டு முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் நிலம் வாங்கினாலோ, திருமணத்தை பதிவு செய்ய வந்தாலோ அவர்களிடம் எப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியும்?
இது போல இன்னும் பல கேள்விகள். இது நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு கட்டணம் (ப்ரீமியம் தட்கல் ரயில் கட்டணம் போல) என சில ஆண்டுகளில் மாறி விடும். நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பதையே இல்லாதவர்கள் விட்டு விடுவார்கள்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரியம் தொலைய ஆரம்பிக்கும். மதச்சார்பற்ற அரசாங்கம் என்று சொல்லிவிட்டு இப்படி செய்தால் அது மத நம்பிக்கைகளுக்குள் குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தும்? சங்கு அது பாட்டுக்கு ஒரு ஓரமாக கிடக்கிறது. அதை சும்மா எடுத்து ஊத செய்வானேன்?