அண்மையில் இணையப் பாதுகாப்புக்கான பன்னாட்டு தொலைத்தொடர்பு சங்கம் அளித்த தரமதிப்பீட்டின்படி. சென்ற ஆண்டு 37வது இடத்தில் இருந்த பாரதம், நிகழாண்டு 10வது நிலைக்கு வந்துவிட்டது. டிஜிட்டல் இந்தியா என்னும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கி 6ம் ஆண்டு நிறைவுக்கு (2015 ஜூலை 1 முதல் 2021 ஜூலை 1 வரை) இதைவிட ஒரு நற்செய்தியும் உலக அங்கீகாரமும் வேறெதுவும் இருக்க முடியாது. இந்தத் தரவரிசை, இணையப் பாதுகாப்புக்கான சட்ட நடவடிக்கைகள், தொழில் நுட்ப நடவடிக்கைகள், நிர்வாகரீதியான முயற்சிகள், பன்னோக்கு ஒருங் கிணைப்பு போன்ற அளவுகோள்கள் சார்ந்த ஓர் இணையவழிக் கணக்கெடுப்பு மூலமாக நிர்ண யிக்கப்படுகிறது.
இதுபோன்ற அளவுகோள்களில் பாரதம் கடந்த ஓரிரு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு முடிவு ஒரு சான்று. படிப்பறிவில் பின்தங்கியதாகக் கருதப் பட்ட பாரதத்துக்கு இந்தக் கணினி படிப்பறிவு (computer literacy) என்னும் புதிய பரிமாணமானது, டிஜிட்டல் இந்தியாவில் நிர்வாகரீதியான, நுகர்வோர் விழிப்புணர்வுடன் கூடிய புதியதோர் அங்கீகாரம் பெற வழி வகுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்திய தொழில்நுட்பச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களும், நடைமுறைகளும் சர்ச்சைக்குள்ளாயின. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பன்னாட்டு சமூக வலைதள நிறுவனங்களின் நிலைப்பாடுகள், குறிப்பாக ட்விட்டர் சார்பில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் ஆகியவை, தற்போது நீதிமன்ற வழக்கு வரை சென்றுள்ளது. இந்நிலையில், பாரதத்துக்கு தரவரிசையில் 10வது இடம் கிடைத்திருப்பது, நமது தொழில்நுட்பச் சட்ட நிலைப்பாட்டுக்கு கிடைத்திருக்கும் அகில உலக அங்கீகாரம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இனி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது டிஜிட்டல் இந்தியா பாதையில் தலைநிமிர்ந்து பயணிக்கலாம். தகவல் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது, தகவல் தொழில் நுட்பமும் இங்கு பாதுகாப்பாக உள்ளது, அதற்கேற்ற சூழலும், சட்டமும் இங்கு சரியாகத் தான் உள்ளன என்று பாரத அரசு கூறிக்கொள்ளலாம். இதே பாதையில், அடுத்த முக்கியமான பயணம் ‘தனி மனித தகவல் பாதுகாப்பு சட்டம்’ தான். இதுவும் கூட சட்டவரைவு, நாடாளுமன்றக் குழுவின் கூட்டங்கள், விவாதங்கள், சிபாரி சுகள் போன்ற பல நிலைகளைத் தாண்டி, நாடாளுமன்றத்தில் நிறைவேறப்படும் நிலைக்கு வந்துள்ளது.
இதுவும் சட்டமாக நிறைவேறிவிட்டால், தகவல் தொழில்நுட்பப் பாதையில் அடுத்த குறிப்பிடும்படியான மைல்கல்லை பாரதம் எட்டிவிடும். அதையடுத்து, தகவல் தொழில்நுட்பத்தில் உலக வல்லரசாக பாரதம் உருவெடுக்கும். அந்த நற்செய்தியும் விரைவிலேயே நமக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக!
கட்டுரையாளர்: கணினி குற்றவியல் வழக்கறிஞர், தலைவர் – டிஜிட்டல் சொஸைடி ஆஃப் இந்தியா.