பக்தர்கள் முடி சீனாவுக்கு கடத்தலா

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் திருமலை ஏழுமலையான் கோயிலில் ஏழுமலையானுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது முதலிடத்தில் உள்ளது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு முடிகாணிக்கை செலுத்துகின்றனர். பெறப்படும் தலைமுடி 6 வகையாக தரம் பிரிக்கப்பட்டு நன்றாக அலசி, உலர வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படும். வெளிநாட்டை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இதில் முறைகேடாக ஏலம் எடுப்பதாக முன்பு புகார் எழுந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மிசோரம் அருகேயுள்ள சீன எல்லையில் அசாம் ஆயுதப் படையினர் வாகனங்களை தணிக்கை செய்யும்போது, திருப்பதியில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படவிருந்த 120 தலைமுடி மூட்டைகளுடன் சரக்கு லாரி ஒன்று பிடிபட்டன. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த கடத்தலுக்கு, தேவஸ்தான அறக்கட்டளை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 2 கோடி ரூபாய் இருக்கும். என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ‘காணிக்கை முடிகளை கூட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விட்டுவைக்கவில்லை’ என தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகி அய்யண்ண பாத்ருடு விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, பா.ஜ.க தேசிய செயலர் சுனில் தியோரா கூறியுள்ளார்.