பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 27) கர்நாடகாவிற்குச் செல்கிறார். அங்கு அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர், பெலகாவியில் பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன்பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின் 13வது தவணைத் தொகையையும் விடுவிக்கிறார். நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் பிரதமரின் உறுதியான செயல்பாடுகள் சிவமொக்கா விமான நிலையத் திறப்பின் மூலம் மேலும் வலுப்படும். ரூ. 450 கோடி செலவில் இந்தப் புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் இரண்டு ரயில்வேத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் சிவமொக்கா ஷிகாரிபுரா ரானேபென்னூர் புதிய ரயில் பாதை மற்றும் கோட்டகங்குரு ரயில்வே பெட்டி பணிமனை (கோச்சிங் டிப்போ) ஆகியவை அடங்கும். இதைத்தவிர, பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 215 கோடிக்கும் அதிகமான செலவில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தீர்த்தஹள்ளி தாலுகாவில் பாரதிபுராவில் புதிய பாலம் கட்டும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். நிகழ்ச்சியின் போது, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ. 950 கோடி மதிப்பில் பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதனால், 4.4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள். சிவமொக்கா நகரில் ரூ. 895 கோடி மதிப்பிலான 44 நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பின்னர் பெலகாவி செல்லும் பிரதமர், விவசாயிகளின் நலனுக்கான பிரதமரின் அர்ப்பணிப்புக்கு மற்றொரு உதாரணமாக உள்ள பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டம் (பி.எம். கிசான்) திட்டத்தின் 13வது தவணைத் தொகையாக சுமார் ரூ. 16,000 கோடியை நேரடிப் பரிமாற்றம் மூலம் பிரதமர் விடுவிக்கிறார். இதன் மூலம் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ. 930 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள லோண்டா பெலகாவி கடபிரபா இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டத்தையும் மறுசிரமைக்கப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டடத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பெலகாவியில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ.1,585 கோடி செலவில் 315க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8.8 லட்சம் மக்கள் பயன்பெறும் ஆறு கூட்டு கிராமத் திட்ட திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.