தேடலே வாழ்க்கையென தெரிவதற்குள் பலமுறை விழுந்து. எழ வேண்டியிருக்கின்றது. கொரோனா இப்படி வாழ்கையை அடித்து போடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் தோழி நளினி என்ற நள்ளு.வானம் காலையிலேயே இடித்தது, கொஞ்சம் பலமாக நள்ளுவின் தலையிலும். கணவர் மனோவுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல்:
மனோ: நள்ளு எனக்கு வேலை போயிடுச்சு
நள்ளு: அச்சச்சோ என்னங்க சொல்லுறீங்க?
மனோ: கொரானா காலத்துல பிசினஸ் ரொம்ப டல்லானதுல வேலையாட்கள் எல்லாம் குறைச்சிட்டாங்க. அதனால, இப்போ நாளையிலிருந்து வேலை இல்லை என்ன பண்ண போறேன்னு தெரியல. மனசு ரொம்ப குழப்பமா பாரமாகவும் இருக்கு.
நள்ளு: கவலையை விடுங்க பாத்துக்கலாம். என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன் மனோ..நள்ளு சொல்லிட்டாளே தவிர, மனசுக்குள்ள பயங்கர தவிர்ப்பு போராட்டம் எப்படி சமாளிக்கிறது, வாழ்க்கையை இங்கிருந்து எப்படி நகர்த்துவது, தன்னுடைய ஒரே பொண்ணோட கல்லூரி கட்டணத்தை எப்படி சமாளிக்கிறது, மருத்துவ செலவுக்கு என்ன பண்றது என்னுடைய சம்பளம் மட்டும் எப்படி பத்தும்… மனதுக்குள் குழப்பம், போராட்டம்.இரவெல்லாம் தூங்கவில்லை. யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம்! காலையில் பால் காயும்போது சட்டென்று ஒரு சிந்தனை தன்னுடைய மகள் மயூவிடம் கலந்தாலோசித்தாள்.
நமக்கு தெரிஞ்ச பாட்டு ஆங்கில பயிற்சி யோகா இதெல்லாம் கற்று தர ஒரு ஆன்லைன் வகுப்பு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தா என்ன? வீட்டிலேயே குழந்தைகள் எல்லாமே கத்துக்க பெற்றோர்களும் விரும்புவார்கள் இல்ல? நன்றாக யோசிச்சு கடகடவென விளம்பரம் கொடுத்து ஒரு வழியா 10 பசங்க சேர்ந்தாச்சு. ஆனால், கட்டணம் 500 ரூபாய் என்பதால் ரொம்ப பெரிய லாபம் எல்லாம் கொடுக்கல. இருந்தும் தளரவில்லை. 10 மாணவர்கள் 20 ஆனார்கள்.
இருந்தாலும், லாபம் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க வேறு ஏதாவது தொழிலும் ஆரம்பிக்கணும் என்ற எண்ணம் வந்தது அவளுக்கு. இந்த சர்வதேச தொற்று காலத்திலும் உணவு மருத்துவம் கல்வி மூன்றும் அத்தியாவசியமானவை. அதுல நம்ம உறுதியாக எடுத்து செய்யணும் என்ற எண்ணம் வந்தது. நமக்கு நல்லா சமைக்க தெரியும். ஏன் ஒரு வீட்டு உணவகம் ஆரம்பிச்சு ஆர்டரின் பெயரில் உள்ள வீடுகளுக்கு பட்டுவாடா செய்யக்கூடாது என்ற யோசனையும் வந்தது.
தன்னுடைய அண்ணன் மகனிடம் ஆலோசித்தாள். ‘‘கண்டிப்பா ஆரம்பிக்கலாம் அத்தை, நல்ல விஷயம்தான் இதுக்கு கொஞ்சம் மெனகெடனும் ஆர்டர் மார்க்கெட்டிங் நான் பாத்துக்குறேன். மாமா வீடுகளுக்கு பட்டுவாடா பாத்துக்கட்டும். நீங்கள் சமையல் பார்த்துக்கோங்க. முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சு பார்க்கலாம்’’ என்றான்.
இப்படித்தான் ‘நெய்வேத்யம்’ என்ற வீட்டு உணவகம் உருவாகி மெதுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்து இன்று மயிலை, மந்தைவெளி சார்ந்த 100+ தொடர் வாடிக் கையாளர்கள் அமைந்துவிட்டு மன நிறைவுடன் பணி சிறப்பாக நடைபெறுகிறது.