தமிழக அரசின் மானிய விலையில் கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் நிலமுடைய விவசாயிகளுக்கு மாடு வளர்க்க, ரூ. 30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இதில், 25 ஆயிரம் ரூபாய் விவசாயி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 5 ஆயிரம் ரூபாய், விவசாய நிலத்தில் தீவன பயிர் வளர்ப்பதற்கான உரங்கள் வாங்க நிதி வழங்கப்படும். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மற்றும் மிட்டாளம் கிராமத்தில் 100 பயனாளிகள் இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு 100 கறவை மாடுகள் வழங்க ஒதுக்கீடு வரப்பெற்றது. வேலூர் மாவட்டம், வேளாண் உதவி இயக்குநரான சத்தியலட்சுமி, இந்த திட்டத்தில் முறைகேடாக தனது உறவினர்களான, தந்தை கருணாநிதி, உறவினர் விஜயா கிருஷ்ணன், சகோதரரின் மனைவி ஆர்த்தி, அன்பு, லட்சுமி, ஞானம்பாள், லலிதா, ஜெயராமன் ஆகியோரின் பெயர்களில் கறவை மாடுகளை வாங்க அனுமதி அளித்துள்ளார். அத்துடன் 100 பயனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பில் உரங்கள் வாங்க மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் போலி பில்களை அரசுக்கு சமர்ப்பித்து பண முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் பேரில் காவல்துறை, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.