நெருக்கடியான தேர்தல்; சாதித்த ஆணையம்!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடே ஒற்றுமையுடன் இருந்து அரசுக்கு துணை நிற்க வேண்டிய நேரத்தில், சிலர் அரசியல் நோக்கத்திற்காக வெறுப்பு பிரச்சாரம் செய்து மக்களை உளவியல் ரீதியாக பிளவுபடுத்துகின்றனர். ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதே நோய் பரவலுக்கு முக்கிய காரணம் என, தேர்தல் ஆணையத்தை அரசியல் களத்தில் இழுத்துவிட்டார்கள். சென்னை உயர்நீதி மன்றமும், தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கே பதியலாம் என்ற தொனியில் குற்றம் சுமத்தியது.

தேர்தல் நடவடிக்கைகளை துவங்கும் போது ஆணையம் சொன்ன முதல் விஷயம் “கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உரிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் பொறுப்பு. இதற்காக அவர்கள் ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களின் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றாது” என்பது தான். அதற்காக தனது பொறுப்புகளை
ஆணையம் உதறி தள்ளிவிடவில்லை.ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, சானிடைசர் வழங்குவது உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து பின்னர் அனுமதிப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் ஓட்டு, இவற்றுக்கெல்லாம் மேலாக கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க தனியாக 1 மணிநேரம் ஒதுக்கி தனது உயிரை பணயம் வைத்து ஜனநாயக கடமையை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் தொண்டர்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய நட்சத்திர பேச்சாளர்களும் தலைவர்களும் அறிவுறுத்த வேண்டும்
போன்ற நிபந்தனைகளை விதித்தது. மேற்கு வங்கத்தில் சில அரசியல்வாதிகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதற்காக பிரசாரக் கூட்டங்களைத் தடை செய்து கடுமை காட்டியது.தேர்தல் முடிந்த பின்னரும்கூட வாக்கு எண்ணிக்கைவரை அமலில் இருக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளில், பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டப் பணிகளை தொடரவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. சமீபத்தில்கூட வெற்றி பெறும் கட்சியினர், கொண்டாட்டங்களில் ஈடுபட, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இத்தகைய நடவடிக்கைகள் காரணமாகத் தான், தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் கேரளத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை பெரிய அளவில் அச்சுறுத்தவில்லை. பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை; குறை சொல்லாமல்
இருங்கள், போதும்!