தனியார் எனச் சொன்னாலேயே நம் நாட்டு இடதுகள் பேயடித்ததுபோல் ஆடுகிறார்கள்.
என்னே இவர்கள் மேதமை
அதென்ன, தனியார் எனில் உடனே ‘அம்பானி அதானி’ என எகிறிக் குதிக்கிறார்கள்? நம் தெரு முனையில் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்பவரும் தனியார்தானே என நம்மால் சாதாரணமாகப் புரிந்துகொள்ள முடிவதுகூட, உலகப் பொருளாதாரத்தையே உள்ளங்கையில் வைத்துக்கொண்டுள்ளதைப் போன்று பாவ்லா காட்டும் இவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடிவதில்லை?
நல்ல நாளிலேயே நாயகம். இப்பொழுது பேராசிரியர் ராகுல் வேறு; ‘ஹம் தோ, ஹமாரே தோ (நாம் இருவர் நமக்கு இருவர்)’ என்று பாடம் எடுக்க வந்துவிட்டாரல்லவா? இனி, கள் குடித்த – தேள் கொட்டிய குரங்கின் கதைதான்.
பூச்சாண்டி காட்டி, பிழைப்பு நடத்து
முன்பெல்லாம் டாட்டா, பிர்லா என்பார்கள். இப்பொழுது அம்பானி- அதானி. இவர்களுக்கு, தங்கள் தோழர்களுக்கு பூச்சாண்டி காட்டிப் பிழைப்பு நடத்த யாராவது வேண்டுமே. நஷ்டமானாலும் அம்பாஸடர் கார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்த பிர்லா வேண்டும். சிங்குரில் கார் கம்பெனி தொடங்க டாட்டா வேண்டும். வங்காளத்தில் இருக்கும் சொற்பமான தொழிற்சாலைகளிலும் உற்பத்தியைப் பெருக்காமல் வெறுமனே தொழிற்சங்க நாட்டாமை செய்து கொண்டு இருக்க வேண்டும்.
வெளியில் புலி வீட்டில் எலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு கட்சியின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடியிலிருந்து (2003- – 04) ரூ. 510 கோடியாக (2018 – -19) உயர்ந்தது. இத்தனைக்கும் 2011ல் வங்காளமும் கேரளாவும் கையைவிட்டு நழுவி விட்டன. வெறும் உண்டியல் குலுக்கியா இவர்கள் நாடு முழுக்க சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள்? பொதுவெளியில் அரங்கத்தில் தங்கள் தொண்டர்கள்முன் வீராவேசமாகப் பேசும் இவர்கள் தொழில் அதிபர்களின் முன் தனி அறையில் சப்த நாடியும் ஒடுங்கி, கைகட்டி, வாய்பொத்தி தங்களுக்கு வேண்டிய தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அமைதியாகி விடுவார்கள். இப்படி இந்த இடது தலைகள் ‘வெளியில் ராஜாங்கம், வீட்டில் சாஷ்ட்டாங்கம்’ எனச் செயல்படுவதால்தான் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும் எடுபடாமல் போய்விடுகிறது.
இதற்குப் பொதுத்துறை வங்கி ஊழியர் -அலுவலர் சங்கங்கள் மிகப்பெரும் உதாரணம். ஊழல் குற்றம் இழைத்தவர்களுக்கு எல்லாம் வக்காலத்து வாங்கப்போய், உயர்மட்டத்தில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வராமல், எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூட முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.