நாட்டில் ஒமைக்ரான் வைரசால், கொரோனா தொற்றின் 3வது அலை துவங்கியுள்ளது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த தொற்று எப்போது உச்சம் அடையும் என்று சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி. கணிதவியல் துறையும், கம்ப்யூட்டேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலம், கொரோனா பரவல் பற்றி பகுப்பாய்வு செய்துள்ளன. அதில், தற்போது ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படும் கொரோனா பரவல் விகிதமானது, 1.57 சதவீதமாக உள்ளது. இது கடந்த 7 முதல் 13ம் தேதிக்கு இடையே 2.2 ஆக இருந்தது. டிசம்பர் 25 முதல் 31ம் தேதிக்கும் இடையே 2.9 சதவீதமாக இருந்தது. ஆக, ஒரு கொரோனா நோயாளி 2.9 பேருக்கு தொற்றைப் பரப்புகிற நிலை, தற்போது 1.57 பேருக்கு என குறைந்துள்ளது. மும்பையில் இது 0.67, டெல்லியில் 0.98, கொல்கத்தாவில் 0.56 என இருக்கிறது. ஆனால் சென்னையில் இது 1.2 ஆக உள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாளில் உச்சம் அடையும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 1 முதல் 15 தேதிகளுக்கு இடையே கொரோனா 3வது அலை உச்சம் அடையும் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.