மத்திய பிரதேச அரசு கடந்த ஜனவரியில், ‘லவ் ஜிஹாத்’ போன்ற கட்டாய மதமாற்றங்களை தடுத்து நிறுத்த ஒரு அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்த அவசர சட்டம் தற்போது ‘மத சுதந்திர சட்ட மசோதா’வாக மாநில சட்டசபையில் கடந்த தாக்கல் செய்யபட்டு நீண்ட விவாதத்திற்குப் பிறகு, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி ஒருவர் மதம் மாற விரும்பினால் அவரும் சம்பந்தப்பட்ட மத போதகரும் 60 நாட்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பட்டியலினத்தோர், மலைவாழ் மக்கள் போன்றோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மத மாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ. 50,000 வரை அபராதமும் விதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் சிறை தண்டனை 10 ஆண்டுகளாகவும் அபராதம் ரூ.1 லட்சம் வரையும் விதிக்கப்படும் என்பது போன்ற பல அம்சங்கள் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.