காங்கிரஸ் பஞ்சாயத்து

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கரில் அம்மாநில முதல்வர்களான அமரீந்தர்சிங், பூபேஷ் பாகல் ஆகியோருக்கு எதிராக கேபினட் அமைச்சர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இரு மாநில ஆட்சிகளையும் தக்க வைத்துக்கொள்ள பஞ்சாயத்து செய்வதில் படுபிசியாக உள்ளார் ராகுல் காந்தி.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாகிவிட்டன.

பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார் முதல்வர் அமரீந்தர்சிங். இதற்காக, சோனியா, ராகுல், பிரியங்கா என ஒட்டுமொத்த குடும்பமே பல மாதங்களாக இருதரப்பினரையும் அழைத்து பஞ்சாயத்து செய்து ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இப்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அவரை மாற்ற வேண்டும் என அமரீந்தர்சிங்குக்கு எதிராக 4 அமைச்சர்கள் உட்பட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

மற்றொரு புறம், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் முதல்வராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி அடுத்து நான்தான் முதல்வர் ஆவேன் என அடம் பிடிக்கிறார் டி.எஸ். சிங் தியோ. ஆனால், அப்படி எந்த ஒப்பந்தம் போடப்படவில்லை என்கிறார் முதல்வர் பூபேஷ் பாகல். இதனால் இருவரையும் அழைத்து பேசியுள்ளார் ராகுல்.