பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் தலைவர் ஆதரவு

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர், மாயாவதி ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் நவாப் காசிம் அலிகான். தற்போது காங்கிரசில் இருக்கும் இவர், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் அசம்கானிடம் தோல்வியடைந்தார். அசம்கான் தனது எம்.பி பதவியை ராஜினாம் செய்ததால், அங்கு வரும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அங்கு பா.ஜ.க சார்பில் கன்ஷியாம் சிங் லோதி போட்டியிடுகிறார். இச்சூழலில், நவாப் காசிம் காங்கிரஸ் தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினேன். ஆனால், சிலர் கட்சி மேலிடத்தை தவறாக வழிநடத்தினர். அதனால், போட்டியிட வேண்டாம் என தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போதும் காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன். எதிர்காலத்திலும் நீடிப்பேன். யாருக்கேனும் ஆதரவு அளிக்கவும், ஓட்டு போடவும் எனக்கு சுதந்திரம் உள்ளது. தேர்தல் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லாததால், நான் பா.ஜ.கவிற்கு ஆதரவு அளிப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, நவாப் காசிம் அலிகானை, பாஜ.க வேட்பாளர் சந்தித்து ஆதரவு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.