காங்கிரஸ், இரு கம்யூக்கள் கட்டெறும்பான ஜீவன்கள்

தமிழகக் காங்கிரசும் இந்தியக் கம்யூனிஸ்ட் (இ.க) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.க) கட்சிகளும் குப்புற விழுந்தது மட்டுமல்லாமல், மீசையில் மண் ஒட்டவில்லை என்கின்றன! தன் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க கிள்ளிப் போட்டதை இரண்டு கைகளாலும் அள்ளிக் கொண்ட இவர்கள், தமிழகத்தில் சனாதன தர்மத்தை நுழைய விடமாட்டார்களாம்… (பா.ஜ.க.வைக் கால் ஊன்றவிடமாட்டோம், அதற்காகத்தான் வாயை மூடிகொண்டு, கிடைத்தது லாபம் எனப் பார்க்கிறோம்!) — இது வாய்ச்சவடால். தமிழ்நாடு ஏதோ தங்கள் அப்பன் சொத்து என்பது இவர்களின் எண்ணம்.

தங்களின் இயலாமையை மூடி மறைக்க பா.ஜ.க. வந்துவிடும் என இங்கே இவர்கள் பூச்சாண்டி காட்ட வேண்டியிருக்கிறது! மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களிலும் இதே போல வாய்ச்சவடால் அடித்தார்களா? இல்லையே? தமிழகத்தில் இவர்கள் வாய் வீச்சு வீசி பா.ஜ.கவை ஒதுக்கும் தீண்டாமைச் சுவர் எழுப்பிப் பார்க்கிறார்கள்! பரிதாபம்தான். இவர்களின் ஜாதகம் சொல்வதே வேறு:

கம்யூனிஸ்ட் ஜாதகம்
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் ‘போதும்,’ எங்களின் செல்வாக்கு கூடியுள்ளது என பட்டியல் கொடுப்பார்கள். ஆனால் 1980லிருந்து இரண்டு கழகங்களுல் ஏதேனும் ஒன்றின்மீது சவாரி செய்து கம்யூனிஸ்ட்கள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டிய நிலைதான் நீடிக்கிறது. 1980-ல் இ.க பெற்ற வாக்கு 2.66 சதவீதம்; மா.க பெற்ற வாக்கு 3.16 சதவீதம். 2016ல் கழுதை கட்டெறும்பான கதைதான் என்கிறது தேர்தல் ஆணையப் புள்ளிவிவரம்: இ.க பெற்றது 0.79 சதவீதம், மா.க பெற்றது 0.71 சதவீதம். அவ்வளவுதான்!. இந்த சூராதி சூரர்கள்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை கால் ஊன்ற விடமாட்டோம் என கொக்கரித்து காமெடி செய்கிறார்கள்!

ஒப்பீடு
மேற்கு வங்க மாநிலத்தில் 30 வருடங்கள் கோலோச்சிய கம்யூனிஸ்ட்களின் நிலைமை என்ன? 1972-ல் அங்கே இ.க பெற்றது 8.33 சதவீதம் வாக்குகள். 1977-ல் இது 2.62 சதவீதமாக குறைந்தது, 2011-ல் 1.84 சதவீதம் ஆகத் தேய்ந்து, 2016-ல் 1.45 சதவீதம் ஆகிவிட்டது! மா.க கட்சி நிலையும் இதேதான். 1972-ல் 27.45 சதவீதம்; 2011ல் 30.08 சதவீதம் ஆகியது; 2016-ல் 19.75 சதவீதம் ஆக தேய்ந்தது. 1972லிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் வாக்கு சதவீதம் குறைந்து வருவதைப் பற்றி சிந்தனை செய்யாமல், நம்மூரில் பா.ஜ.க.வை ஒரு கை பார்க்க தோழர்கள் புறப்படுவதுதான் கூத்து.

இன்னோர் ஒப்பீடு
கேரளத்திலும் கம்யூனிஸ்ட்கள் கூட்டணியின் மூலமே ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், வாக்கு சதவீதம் குறைந்துகொண்டு தான் வருகிறது. 2011-ல் அங்கே இ.க பெற்றது 8.72 சதவீதம்; 2016ல் 8.12 சதவீதம் மட்டுமே. 2011-ல் மா.க பெற்றது 28.18 சதவீதம்; 2016ல் 26.52 சதவீதம் மட்டுமே. தற்போது ஆட்சி நடத்தும் கம்யூனிஸ்ட்கள் தங்களின் வாக்கு சதவீதம் தேய்வது பற்றிக் கவலைப் படாமல், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க ஆலாய்ப் பறக்கிறார்கள்! (கேரளத்தில் பா.ஜ.க. 2011-ல் 6.03 சதவீத வாக்குகளைப் பெற்று, 2016-ல் 10.53 சதவீதமாக உயர்த்திக் காட்டியுள்ளது).

பரிதாப காங்கிரஸ்
தமிழகக் காங்கிரஸ் கதை என்ன? கூட்டணி பேரத்தில் போராடித் தோற்ற பின்னர் கொடுத்த இடங்களைப் பெற்றுக்கொண்டு, தன் தோல்வியை மறைக்க பா.ஜ.க.வை வசைபாடுகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி. தி.மு.க தலைவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் காந்தி, நேரு, காமாராஜர் பற்றிப் பேசியவற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் இவர்களுக்கு சொரணை உண்டு என அர்த்தம். இதோ சில: “காமராஜர் ரஷ்ய விஜயத்தின்போது ரஷ்யாவில் கடுங்குளிர் காமராஜைப் பாதிக்கவில்லை. காரணம் காமராஜின் தோல், காண்டாமிருகத் தோல்” — இது தி.மு.க. தலைவர்களின் விமர்சனம். “ஹைதராபாத் வங்கியில் ஆறு கோடி ரூபாய் காமராஜ் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது”. “ஏழைப் பங்காளர் வாழும் பங்களாவைப் பாரீர்!” என்றுகூறி– காமராஜர் குடியிருந்த வாடகை வீட்டைக் காட்டி ஓட்டுக் கேட்டவர்கள் தி.மு.கவினர். “காமராஜ் ராஜாக்களின் கூஜா” என்றார் கருணாநிதி. இப்படிப்பட்ட தி.முக.வுடன், கொள்ளையடிப்பதையே லட்சியமாகக் கொண்ட தி.மு.கவுடன் கூட்டுவைக்கும் காங்கிரஸ், காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பது வெற்றுக் கூச்சல்.

நாராசங்கள்
“உபவாசத்தாலேயே மிரட்டும் உத்தம குண வித்தகர்” என ’திராவிட நாடு’ 6.8.1944 இதழில் அண்ணாதுரை எழுதினார். “காந்தியார் ஒன்றும் கடவுளல்ல; மகானும் அல்ல; அவர் ஒரு காமாந்தகாரர். சுசீலா நய்யார்கள் சூழ வர, கோகில கானங்கள் கீதங்கள் பாட, கோபாலசுவாமிகள் தாளங்கள் போட, கன்னிப் பெண்கள் தோளிலே கைபோட்டு வரும் காந்தியைப் பார்த்தாயா தம்பி?’’ இதுவும் அண்ணாதுரை எழுத்துத்தான். இப்படிப்பட்ட தி.மு.க. தலைவர் சொற்படி கேட்கும் காங்கிரஸ், பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, கட்சிக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்கட்டும்.

காங்கிரஸ் தேய்மானம்
1967க்குப் பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை. 1980 சட்டமன்றத் தேர்தலில் 114 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் வெற்றி பெற்று 20.92 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 2011-ல் பெற்றது 9.30 சதவீதம் மட்டுமே. 2016-ல் வெறும் 6.42 சதவீதம். இவர்கள் தமிழகத்தில் பா.ஜ.க.வை கால் ஊன்ற விடமாட்டார்களாம்! சித்தாந்த ரீதியாக பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்த வேண்டுமாம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் யோக்கியர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்!

பா.ஜ.க வளர்முகம்
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் கண்ட வளர்முக வரலாறு: 1980-ல் 1.63 சதவீதம்; 1989-ல் 2.52 சதவீதம்; 2011-ல் 2.22 சதவீதம்; 2016-ல் 2.84 சதவீதம்; தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால் வாக்கு சதவீதம் குறையவில்லை. பல பகுதிகளில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

உதிரிகள்
ம.தி.மு.க.வின் வைகோ தனது கட்சியை தி.மு.க.விடம் அடகு வைத்த கதை : ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர்விட்டு கருணாநிதியை முச்சந்தியில் நாறடித்த இவர் ‘ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்காமல் விடமாட்டேன்’ என சூளுரைத்து, போர்ப் பரணி பாடுகிறார். தி.மு.கவை எதிர்த்துக் கட்சியைத் துவக்கிய இவர், கொடுத்த 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலை. இவரையும் காணலாம். இவரும் திருமாவளவனும் சனாதன தர்மத்தைத் தடுக்க தி.மு.க. கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியைக் கால் ஊன்ற விட மாட்டோம் என்கிற கூட்டத்தில் சேர வரிசை கட்டுபவர்கள்.

-ஈரோடு சரவணன்