ரசியா பீபி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா பகுதியில் பிறந்தார். இளம் வயதிலேயே பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியுடன் திருமணம் நடைபெற்றது. பாரதத்தில் பயங்கரவாத செயல்களை நடத்த பாகிஸ்தானால் எல்லைத்தாண்டி அனுப்பப்பட்ட அவர், 2018ல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
ரஸியா பீபி சமீபத்தில் தனது குழந்தைகளுடன் பாரதத்துக்குத் திரும்பி வந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘நாடு திரும்பியது நான் எடுத்த சிறந்த முடிவு. என் கணவர் இறந்த பிறகு, அந்த பயங்கரவாத அமைப்பினர் எங்களுக்கு ஒரு வருடம் சிறிது பணம் கொடுத்தார்கள். அதன் பின்னர் நிறுத்திவிட்டார்கள். எனக்கு குடும்பத்தை நடத்துவது கடினமானதால், சம்பாதிக்க வீட்டு வேலைகளை செய்தேன்.
பல நாட்கள் எங்களுக்கு உணவு கிடைக்காது. என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து என்னால் தூங்க முடியவில்லை, என் குடும்பம் அனுபவித்த கஷ்டங்களை யாரும் ஒருபோதும் அனுபவிக்க்கூடாது. சில மாதங்களாக கையில் பணம் இல்லாததால், பாகிஸ்தானை விட்டு வெளியேறி பாரதம் திரும்ப முடிவு செய்தேன். சிலரின் உதவியுடன் பாஸ்போர்ட்டை உருவாக்கி நேபாள எல்லை வழியாக பாரதம் வந்தேன்.
விசாரணைக்காக காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். இங்கு எங்களுக்கு என்ன நடக்கும் என்று ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால், காவலர்கள் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டனர். நாங்கள் காவல்நிலையத்தில் இருப்பதை அவர்கள் உணர விடவில்லை. பாரத ராணுவ வீரர்களின் நடத்தை மிகவும் நன்றாக இருந்தது. நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் இஸ்லாத்தின் பெயரால் இளைஞர்களை தவறாக வழிநடத்தி பயங்கரவாத பாதைக்குத் தள்ளுகின்றன. அவர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்தை காப்பதாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஆட்சேர்ப்பு செய்கின்றனர். அவர்களால் அவர்களையே கவனித்துக்கொள்ள முடியாதபோது எப்படி மற்றவர்களை காப்பார்கள்?
எங்கள் வீட்டு ஆண்கள் ஒருசில நாட்களிலும் திரும்பி வருவார்கள் ஒரேயடியாக வராமலும் போய்விடுவார்கள். என்னைபோல பாகிஸ்தானில் விரக்தியில் வாழும் பல பெண்களும் குழந்தைகளும் இருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உணவு, உடை, மருந்துக்குகூட வழி இல்லை. ஆனால், பயங்கரவாத அமைப்புகளின் எஜமானர்கள் சௌகரியமாக இருக்கின்றனர்.
துப்பாக்கி ஏந்த வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு மனிதநேயம் தான் பெரியது. மதம், குடும்பம், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதே உண்மையான ஜிஹாத் என்று நான் நம்புகிறேன். “குடும்பங்களை அழிக்காதீர்கள்” என்று ஹிஸ்புல் முஜாஹிதீனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.