ஞாயிற்றுக்கிழமையன்று மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் கொங்காரி ஆகியோரின் வாகனங்களில் ஏராளமான பணத்தை மேற்கு வங்க காவல்துறை கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தேசிய அளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு எதிராக ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ குமார் ஜெய்மங்கல் அளித்த புகாரின் அடிப்படையில் ஜார்க்கண்ட் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதில், ஜார்கண்டில் ஜே.எம்.எம் தலைமையிலான அரசை கவிழ்க்க பா.ஜ.க திட்டமிட்டதாகவும், இதற்காக அசாம் முதல்வரை சந்திக்க மூன்று எம்.எல்.ஏக்கள் தன்னை கொல்கத்தாவிற்கு அழைத்ததாகவும் ஜெய்மங்கல் புகாரில் கூறியுள்ளார். மேலும், புதிய அரசில் தனக்கு மந்திரி பதவி வழங்குவதாகவும், தற்போதைய அரசை கவிழ்க்க உதவுவதற்காக 10 கோடி ரூபாய் வழங்குவதாக சர்மா கூறியதாகவும் எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் தெரிவித்தனர் என ஜெய்மங்கல் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை கடுமையாக கண்டித்துள்ள அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கைது செய்யப்பட்ட 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தன்னை சந்திக்க வற்புறுத்தியதாக ஜெய்மங்கல் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் போலியானது, புனையப்பட்டது. இது, போஃபர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய ஒட்டாவியோ குவாட்ரோச்சியை காங்கிரஸ் கேட்பது போல உள்ளது என கிண்டல் அடித்துள்ளார். மேலும், ‘இந்த மோசடி குற்றச்சாட்டை கூறிய ஜெயமங்கலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என்றார்.