லால்குடி அருகே, சிமென்ட் நிறுவனத்தில் ரகளை செய்ததாக, தி.மு.க., நகர செயலர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் தலைமையில், சிமென்ட் நிறுவனம் முன், போராட்டம் நடத்த கட்சியினர் அனுமதி கேட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடி பேரூராட்சி தலைவராக உள்ள பால்துரை என்பவர், கல்லக்குடி தி.மு.க., நகரச்செயலராகவும் உள்ளார். கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமென்ட் நிறுவனத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் ஆதரவாளரான பால்துரை, கடந்த 17ம் தேதி இரவு, தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து, பொருட்களை அடித்து சேதப்படுத்திஉள்ளார். மேலும், சிமென்ட் நிறுவனத்தின் நுழைவாயில் முன், சேர் போட்டு அமர்ந்து, ரகளையில் ஈடுபட்டார். டால்மியா சிமென்ட் நிறுவனத்தினர், ‘சிசிடிவி’ காட்சிகளை ஆதாரமாக வைத்து, பால்துரை உள்ளிட்ட மூன்று பேர் மீது, கல்லக்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், சிமென்ட் நிறுவனத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள மெயின் கேட்டை இடித்து அகற்ற வேண்டும் என்பன பேன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரூராட்சி தலைவர் பால்துரை தலைமையில், போராட்டம் நடத்துவதற்கு, கல்லக்குடி போலீசில் அனுமதி கேட்டுள்ளனர்.