சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எம்.வி. பி.பி.சி நேப்பிள்ஸ் என்ற கப்பல் ஆன்டிகுவா மற்றும் பார்படாஸின் கொடியுடன் ரோட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சீனா சென்று கொண்டிருந்தது. அதில் பழுது ஏற்பட்டதாகக் கூறி, இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அந்த கப்பலில், அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படும் ‘யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட்’ என்ற ஆபத்தான அணுக் கதிர்வீச்சுப் பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அக்கப்பலை தங்கள் நாட்டு எல்லையை விட்டு உடனடியாக வெளியேற இலங்கை உத்தரவிட்டுள்ளது என இலங்கை அணுசக்தி ஆணையத்தின் (SLAEA) உயர் அதிகாரி அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பு அரசாங்கத்தால் சீனாவிடம் இருந்து வாங்கிய 1.4 மில்லியன் டாலர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்திற்கு தெற்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகம் 2017ல் சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இத்துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகில் உள்ளது. இதனால் இது நமது பாரதத்திற்கு மட்டுமல்ல கடலில் பயணிக்கும் அனைத்து நாட்டுக் கப்பல்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.