பிப்ரவரி 1 அன்று மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கவிழ்த்து விட்டு, ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. 2020 நவம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக் கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ராணுவம் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது.
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும், அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் இருப்பது சீனாவின் கை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அங்கே ராணுவ ஆட்சி என்பது புதிதல்ல. 1962 முதல் 2011 வரையிலும் ராணுவத்தின் ஆட்சியே நடைபெற்றது. 1990-ல் சுதந்திரமான தேர்தலை நடத்த ராணுவம் முன் வந்தது. நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி பெற்றபோது, ராணுவம் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் ஆங் சான் சூகியை 22 வருடங்கள் வீட்டுக் காவலில் வைத்தது. அதே செயலைத் தற்போதும் செய்துள்ளது. ஒரே வித்தியாசம், தற்போது ராணுவ ஆட்சி ஏற்பட சீனாவின் குள்ளநரித் தந்திரமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் செவ்வாயன்று கூடியது. மியான்மர் ராணுவப் புரட்சிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடவிடாமல் சீனா தடுத்தது. இதன் காரணமாக கவுன்சிலின் கண்டன அறிக்கை வெளிவரவில்லை. இது மியான்மரின் உள்நாட்டுப் பிரச்சினை எனக் கருதுவதால் சீனா கூட்டுக் கண்டன அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பொருளாதாரத் தடைகள் அல்லது சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலை மையை இன்னும் மோசமாக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது. தெற்காசியா – தென் கிழக்கு ஆசியா இடையே பாலமாக அமைந்துள்ள நாடு மியான்மர். தனது ராஜதந்திரத்தின் மூலம் மோடி அரசு மியான்மர் ராணுவத்திடமும், அரசாங்கத்திடமும் நல்லுறவைப் பேணிக் காத்து வருகிறது.
இந்தியாவிற்கு எதிராக புவிசார் அரசியல் தளமாக மியான்மர் நாட்டில் மோசமான ஒரு கட்டமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டது. 2021 ஜனவரி மாதம் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட ராஜதந்திரி மியான்மர் தலைநகருக்கு வந்து ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹேலிங் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளை சந்தித்துச் சென்றார். சந்தித்த ஒரு வாரத்திற்குள் மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, சீனாவின் சதி திட்டம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா, மியான்மரில் நடந்த ராணுவ ஆட்சியை, முக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பு என குறிப்பிட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஜெனரல்களை சீனாவாவது கண்டிப்பதாவது?
மியான்மரில் ஜனநாயக ஆட்சி வருவதை சீனா விரும்பவில்லை. 2019லேயே மியான்மர் நாட்டில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து அந்த நாட்டு அரசை வீழ்த்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை மியான்மர் ராணுவத் தளபதி முன்வைத்ததுண்டு. மியான்மர் தளபதியான மின் ஆங் ஹ்லேங் ரஷ்ய அரசு நடத்தும் தொலைக்காட்சியான ஸ்வெஸ்டாவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தங்கள் நாட்டில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் ‘வலுவான சக்திகளால்’ ஆதரிக்கப்படுவதாகக் கூறினார். அவர்களை அடக்குவதற்கு சர்வதேச உதவியை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார். மியான்மர் ராணுவத்தை 2019ல் பயங்கரவாதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாதக் குழுவுக்கு சீனா நிதியும் அதிநவீன ஆயுதங்களும் வழங்கி வருவதாக லிகாஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மர் போல் இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்த இந்த மாதிரி பின்வாசல் வழியில் சீனா செயல்படுவதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது. மியான்மரின் ராணுவம் தடைசெய்யப்பட்ட, தாங் தேசிய விடுதலை ராணுவத்தின் இடத்தில் 2019 நவம்பரில் ரெய்டு நடத்தியது. அப்போது, ஏவுகணைகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை மீட்டெடுத்தது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை “சீன ஆயுதங்கள்” என்று மியான்மர் ராணுவம் அப்போது அறிவித்திருந்தது. இதன் மூலம் சீனாவின் கோரமுகம் மற்றொரு முறை சர்வதேச சமூகத்தின் முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது. பல ஆண்டுகளா மியான்மர் ராணுவ ஆட்சிக் குழுவினரால் ஆளப்பட்ட போதிலும், இந்தியா நெருங்கிய உறவுகளை வளர்த்து கொண்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா சொந்த பற்றாக்குறையை எதிர்கொண்ட போதிலும், மியான்மருக்கு நீர்முழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துவீரை மியான்மர் கடற்படைக்கு வழங்கியது. இந்தியா- – மியான்மார் எல்லைப் பகுதியில் நடமாடும் இந்திய பயங்கரவாதிகளை ஒடுக்க எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளை மியான்மர் அரசு அனுமதித்தது நினைவிருக்கும்.