சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகம் முழுவதும் வல்லாதிக்கம் செலுத்த விரும்புகிறார். விரிவாக்கக் கொள்கையில் அவர் தீவிரமாக உள்ளார். சீனாவின் இந்த நாசகார அணுகுமுறையை முற்றிலுமாக முறியடிக்கவேண்டும் என்ற பிரதான இலக்கின் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் அணி திரண்டுள்ளனர். இது க்வாடு கூட்டமைப்பு என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
சீனாவின் அணுகுமுறை உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவிலுள்ள வூகான் நகரில்தான் கொரோனா தொற்று முதன்முதலாகத் தோன்றியது. அங்கிருந்து வெகுவேகமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. இதற்கு சீனா தெரிந்தோ, தெரியாமலோ உதவியுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கும் சீனாவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறமுடியாது. இதனால் உலக நாடுகள் அனைத்துமே சீனா மீது கோபமும் ஆத்திரமும் கொண்டுள்ளன. எல்லா முனைகளிலும் விரிவாக்கத்தை அமலாக்கவேண்டும் என்பதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வெகு தீவிரமாக உள்ளார். இந்தியா, தைவான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் பகுதிகளை அபகரிக்க சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனாவுக்கு சரியான பதிலடி கொடுக்க இந்தியாவும் தைவானும் தயங்கியதில்லை.
தென் சீனக் கடல்பகுதியில் மூன்று போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. சீனாவால் தைவான், இந்தோநேஷியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நிலப்பரப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எந்த நாட்டுடனும் வம்புச்சண்டைக்குப் போக சற்றும் தயங்குவது கிடையாது. பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. தென் சீனக் கடலில் அமைந்துள்ள பவளப்பாறை தீவுப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு சீனாவை அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது. ஆனால் இதை சீனா பொருட்படுத்தவில்லை. அப்பகுதி தனக்கே சொந்தமானது என்று சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.
ஹிந்து மகாசமுத்திரப் பகுதியில் கூட மாலத்தீவு அருகே செயற்கை தீவை உருவாக்க சீனா விரும்புகிறது. அங்கு பாரதத்துக்கு எதிராக தனது படையை நிறுத்திவைக்க சீனா துடிக்கிறது. ஆனால் அமெரிக்கா அப்பகுதியில் B-2 ராணுவ தளவாடங்கள் சார்ந்த கேந்திரத்தை அப்பகுதியில் அமைத்துள்ளதால் சீனாவின் முயற்சி பழிக்கவில்லை. அமெரிக்காவின் மீது சீனாவின் ஆத்திரம் திரும்பியுள்ளது. ஹாங்காங் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களது உரிமைகளை சீனா தொடர்ந்து நசுக்கி வருகிறது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மக்களின் உரிமைகளை சீனா பறித்துவிட்டது. எனினும், 2019ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஹாங்காங் மக்கள் சீனாவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். வன்முறையும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. லடாக்கை சீனா ஆக்கிரமித்துக்கொண்டது.
ஹிந்து மகா சமுத்திரத்தில் சீனா வல்லாதிக்கம் செலுத்த முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இவ்விரண்டு நிகழ்வு களாலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் நலிந்துவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையை எட்டிவிட்டது. கொரோனா வைரஸ் சீனா விலிருந்துதான் பரவியது என்று கூறப்படுவது குறித்து சர்வதேச அளவில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஆஸ்திரேலியா குரல் எழுப்பியது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கும் சீனா வுக்கும் இடையே மோதல் வலுத்தது. ஆஸ்திரேலிய சமூகம், பல்கலைக்கழகங்கள், ஊடகம் ஆகியவற்றிலும் சீனாவின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால்தான் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு மோசமான நிலையை எட்டிவிட்டது என்று அமெரிக்க அட்மிரல் அக்யூலினோ அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் பகுதியில் சீனா சட்டவிரோதமாக அத்துமீறல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள நிலப்பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. போர்க் கப்பல்களை நிறுத்திவைத்து அச்சுறித்து வருகிறது. இதுவும் உறவு நலிவுக்கு முக்கிய காரணங்களாகும்.
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே எதிலுமே கருத்திணக்கம் இல்லை. ஜப்பானுக்குச் சொந்தமான நிலப்பரப்பை யெல்லாம் தனக்குச் சொந்தமானது என்று சீனா அடாவடித்தனமாக உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்கு சீன கடலில் உள்ள டயோவு தீவு தொடர்பான மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினையை மேலும் உக்கிரப்படுத்திவிட்டது. சீனாவின் வல்லாதிக்க அணுகுமுறையும் தன்னைத் தவிர வேறு யாரும் சர்வதேச அளவில் வலுவடையக்கூடாது என்ற கண்ணோட்டமும்தான் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க மூலக் காரணம். தென் சீனக் கடலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூனே, கம்போடியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கு உரிமையுள்ளது.
ஆனால், இந்த நாடுகள் எதையும் சீனா ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இந்தோ பசுபிக் பிராந்தியம் சார்ந்த சுயேட்சையான கூட்டமைப்பு இன்றியமையாதது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஒரணியில் திரளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் குறிப்பிட்டார். இந்தக் கூட்டமைப்புக்கு அனுசரணையாக அமெரிக்கா செயல்படும் என்றும் தெரி வித்துள்ளார். சீனாவுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் திரண்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
2050ம் ஆண்டு வரை ஆறு முனைகளில் யுத்த நடவடிக்கைகளை சீனா வரைவுத் திட்டமாக வகுத்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், இதில் முனைப்பு காட்டி வருகிறார். தைவானை தன்னுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதில் சீனா தீவிரமாக உள்ளது. தென் சீனக் கடலில் உள்ள ஸ்பிராட்லி தீவை மீண்டும் ஆக்கிரமிக்கவேண்டும். தெற்கு திபெத்தை மீண்டும் ஆக்கிரமிக்கவேண்டும். சர்ச்சைக்கிடமான டயோவு தீவு, ரையூ கியூ தீவு ஆகியவற்றையும் மறுபடியும் ஆக்கிரமிக்கவேண்டும். மங்கோலியாவின் எல்லைப்பகுதியை சீனாவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் உள்ளிட்ட அம்சங்களுடன் மட்டும் சீனாவின் ஆக்கிரமிப்புத் திட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை. ரஷ்யாவுக்குச் சொந்தமான பகுதியையும் அபகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு குவாடு அமைப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கமாண்டர் நிலையில் நடத்தப்பட்ட 11வது சுற்று பேச்சுவார்த்தையடுத்து லடாக்கிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது. அண்மையில் நடைபெற்ற குவாட் மெய்நிகர் உச்சி மாநாடு குறித்து சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸில், கருத்து தெரிவித்துள்ளது. தனது விரக்தியை சீனா பிரதிபலித்துள்ளது. சீனாவுக்கு எதிராக நான்கு முக்கிய நாடுகள் அணி திரண்டுள்ளதை அந்த ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி முதன்மைப் படுத்திவரும் வசுதைவ குடும்பகம் கோட் பாட்டுக்கு உலக நாடுகளிடையே அமோக ஆதரவு கிட்டியுள்ளது. கொரோனாவை முறியடிக்க உரிய மருந்து களை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா தாராளமாக அனுப்பி வைத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவை எதிர்கொள்ளும் முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்திய மருந்துத் தயாரிப்பு தொழில் துறை உலகுக்கே மருந்துகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் பலநூறு கோடி டோஸ் மருந்து தயாரிக்க அமெரிக்கா ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட நான்கு நாடுகளும் குவாட் என்ற அமைப்பின் கீழ் திரண்டுள்ளது சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்கு வளர்பிறையாகவே உள்ளது. முன்பிருந்த அரசுகள் இதில் உரிய கவனத்தைச் செலுத்தவில்லை.
ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதற்கு உரிய முன்னுரிமையையும் முக்கியத்துவத்தையும் அளித்து வருகிறது. மேலும் பல நாடுகளைச் சேர்த்து நேட்டோ அமைப்பு போல ராணுவ கூட்டமைப்பாக குவாடு அமைப்பை மாற்றவேண்டும் என்று நட்பு தேசங்கள் சில யோசனை கூறியுள்ளன. ஆனால் இத்தகைய விரிவாக்கம் தேவையற்றது என்பதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸம் ஒடுக்கப்பட்டால்தான் உலகில் ஜனநாயகம் தழைத்தோங்கமுடியும். இதற்கு சீனா பலவீனப்படவேண்டியது அவசியம். இன்றைய பிரதான தேவை இதுதான் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். உலகம் இதைத்தான் எதிர்பார்க்கிறது. சீனா சின்னாபின்னமாகும் நிகழ்வை துரிதப்படுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு க்வாடு அமைப்பு இயங்கிவருகிறது. கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறியதைப் போல சீனாவும் உடைந்து சிதறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் புலப்படுகின்றன.
நன்றி : ஆர்கனைசர் (ஆங்கில வார இதழ்) தமிழில் : அடவி வணங்கி