இந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பாரதம் முழுவதும் திட்டமிடப்பட்ட பல ஜி20 நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) அன்று அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சீனா பங்கேற்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ‘தெற்கு திபெத்தின்’ ஒரு பகுதி என கூறிக்கொண்டு சீனா உரிமை கோரும் அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில் இந்த ஜி20 கூட்டம் நடைபெற்றது. இந்த மாநிலத்தின் மீதான சீன உரிமைகோரலை திட்டவட்டமாக நிராகரித்து வரும் பாரதம், அருணாச்சல பிரதேசம் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்துகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சீனா பங்கேற்காததை அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், இந்த சந்திப்பு குறித்து பாரதத்திடம் சீனா அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததா என்பது தெரியவில்லை. சுவாரஸ்யமாக, அருணாச்சலத்தில் நடைபெற்ற ஜி20 மாநாடு ரகசியமானது என அறிவிக்கப்பட்டது. ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதிக்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.