மகாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்த விவசாயியான மகேஷ் குமார், தனது பண்ணையில் உள்ள கோழிகள் 6 மாதங்களுக்கு மேலாக முட்டை இடாததால் கால்நடை மருத்துவரிடம் கோழிகளை பரிசோதித்தார். அவை உட்கொண்ட தீவனத்தின் காரணமாகவே முட்டை போடும் திறனை இழந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால், தான் கோழி தீவனம் வாங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மகேஷ் குமார். புதிய விதமான புகாராக இருந்ததால், இது குறித்து கால்நடை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர் காவல்துறையினர். சிலவகை செயற்கை தீவனங்களை உட்கொண்டால் கோழிகள் சிறிது காலத்துக்கு முட்டை இடாது. பழைய தீவனம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று கால்நடை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரச்சனையை பெரிதக்க விரும்பாத அந்த நிறுவனம், விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தது. இதனையடுத்து, மகேஷ் குமார் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டார்.