நூற்றாண்டு காணும் கீதா பிரஸ்

பகவத் கீதை, ராமாயணம் என ஹிந்து மத புத்தகங்களை அச்சிட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்று ஹிந்து மதத் தொண்டார்றி வரும் நிறுவனம் கீதா பிரஸ். இந்த  நிறுவனம், 1923 மார்ச் 1ல் சுதந்திரப் போராட்ட காலத்தில் கோரக்பூரில் துவங்கப்பட்டது. 99 ஆண்டுகள் நிறைவை செய்து நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது கீதா பிரஸ். தற்போது புத்தகங்களை அச்சிடுவதற்காக, உயர் தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. ஜெர்மன், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த இயந்திரங்களில் தினசரி 50 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிப்படுகின்றன. 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவ்வளவு பெரிய மகத்தான பணியையும் சாதனைகளையும்  எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக தொடர்ந்து செய்து வருகிறது இந்நிறுவனம்.

கீதா பிரஸ்ஸின் அறங்காவலரான தேவி தயாள் அகர்வால்,  ‘ஹிந்து மதப் புத்தகங்களை மக்களுக்கு லாப நோக்கின்றி குறைந்தபட்ச விலையில் வழங்குவதே எங்கள்  நோக்கம். சுதந்திர போராட்டக் காலத்தில் மக்களுக்கு பகவத் கீதையின் பிரதிகள் கிடைப்பது கடினமாக இருந்தது. இதற்காக 1923ல் ஜெய தயாள் கோயந்த்கா இதனை நிறுவினார். பிரசாத் போத்தார் இதில் கைகோர்த்தார். முதல் நான்கு ஆண்டுகளில், கீதா பிரஸ் பழங்கால வேதங்களை மட்டுமே அச்சிட்டது. பிறகு ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் உள்ளிட்ட ஹிந்து மத புத்தகங்களை அச்சிடத் தொடங்கியது.

தற்போது 15 மொழிகளில் 1,800க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50,000 புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. ஆனால் தேவை அதைவிட அதிகமாக உள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது கீதா பிரஸ். இதுவரை 71.77 கோடி புத்தகங்களை கீதா பிரஸ் விற்றுள்ளது. அதில், ஸ்ரீமத் பகவத் கீதை 1,558 லட்சம், ஸ்ரீராம சரிதமனஸ் 1,139 லட்சம், புராணம், உபநிடதம், ஆதி கிரந்தம் ஆகியவை 261 லட்சம், பெண்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 261 லட்சம், பக்தி சரித்திரங்கள், பஜன் மாலா ஆகியவை 1,740 லட்சம், பிற வெளியீடுகள் 1,373 லட்சம் அடங்கும்’ என்று கூறுகிறார்.

புத்தக பதிப்புகளைத் தவிர, கீதா பிரஸ்ஸின் மிகவும் பிரபலமான ஹிந்தி இதழான கல்யாண் 2,45,000க்கும் அதிகமான சந்தாதாரர்களையும் ஆங்கிலப் பதிப்பான கல்யாண கல்பதரு 100,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது.