திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை, ஒருமையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டசெயலாளர் பாஸ்கரன் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து ஆரணி வந்த அவரை மாங்காமரம் பகுதியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது ஆரணி நகர காவல் நிலையம் முன்பு வந்த அவர்கள் காவல்துறையினருக்கு எதிராக மிகவும் கெழ்தரமாக காவல்துறையை கொச்சைப்படுத்தும் வகையில் கோஷமிட்டனர். மேலும், இதனை அலைபேசியில் படம்பிடித்த காவலர்களையும் அநாகரீக வார்த்தைகளால் சாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும். ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிக்கைவெளியிட்டிருந்தார். இந்த சூழலில், தற்போது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் உட்பட 50 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ள மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆரணியில் 200க்கும் மேற்பட்ட காவல்ர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.