மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக வழக்கு

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ‘2020ல்நாட்டில் கொரோனா தொற்று பரவியபோது, ​​அஸ்ஸாம் அரசு, முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவின் மனைவி நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவரது மகனின் வணிக கூட்டாளிகளுக்கு சந்தை விலைக்கு மேல் பி.பி.இ கருவிகளை வழங்க ஒப்பந்தங்களை வழங்கியது’ என குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, சிசோடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். மேலும், ‘முழு நாடும் மோசமான தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில், அசாமில் பி.பி.இ கருவிகள் எதுவுமே இல்லை. என் மனைவி முன்வந்து சுமார் 1,500 பி.பி.இ கிட்களை அரசுக்கு இலவசமாக அளித்து உயிரைக் காப்பாற்றினார். அதற்கு அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை’ என தெரிவித்தார். இந்நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக கௌஹாத்தியில் உள்ள காம்ரூப் சிவில் நீதிமன்றத்தில் 100 கோடி ரூபாய் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார் முதல்வரின் மனைவி ரினிகி புயான் சர்மா. அவரது வழக்கறிஞர் பத்மதர் நாயக், இந்த வழக்கு விரைவில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.