கேரளாவின் கொல்லம் மாவட்டம் கடக்கலில், 40 வயதான ஒரு பெண் தனது தனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு ,காலை 10 மணிக்கு தன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அலைபேசியில் தனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் செய்தியில், சில நாட்களுக்கு முன் அவர் செய்துகொண்ட கொரோனா பரிசோதனையின் முடிவு வந்திருந்தது. அதில், தனக்கு கொரோனா உள்ளது என செய்தி வந்ததும், பதட்டத்தில் காரை ஒரு மின் கம்பத்தில் மோதி கவிழ்த்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக லேசான கீறல்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு கொரோனா என தெரியவந்ததால், அப்பக்கமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவரை ஏற்றிக்கொள்ள மறுத்து விட்டன. அப்பக்கமாக வந்த ஒரு தீயணைப்பு வாகனத்தினர் அவருக்கு ஒரு பி.பி.இ பாதுகாப்பு உடையை வழங்கினர். எனினும், கொரோனா நோயாளியைக் கொண்டு செல்ல தீயணைப்பு வாகனம் பயன்படுத்த அனுமதி இல்லாததால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டனர். ஒரு மணி நேரம் சாலையில் இருந்தபோதும், எந்த உதவியும் கிடைக்கவில்லை. பின்னர், அந்தப் பெண் தனது உறவினரால் ஒரு தனியார் காரில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.