புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ‛உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி’ என்ற தலைப்பில் 50 ஆயிரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 12 தலைப்புகளில் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரிக்குத் தனிக் கல்வி வாரியம், கல்வித் தேர்வாணையம், பெண்களுக்கு மழலையர் கல்விமுதல் உயர்கல்விவரை இலவசம், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில் அரசு நிர்வாகம் இல்லை, கொரோனா கால மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஆடை உற்பத்தித் தொழில்நுட்பப் பூங்கா உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.